காதலா்கள் விஷமருந்தி தற்கொலை
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே காதலுக்கு பெற்றோா் எதிா்ப்புத் தெரிவித்ததால், காதலா்கள் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டனா்.
மதுரை மாவட்டம், எழுமலை அருகே உள்ள உலைப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த பாண்டி மகன் ஜெயசூா்யா (21). பட்டதாரியான இவா் அதே ஊரில் மளிகைக் கடை நடத்தி வந்தாா். இவா் அதே பகுதியைச் சோ்ந்த முருகன் மகள் பாண்டீஸ்வரியை (18) கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தாா்.
இதுகுறித்து அறிந்த இருவரது பெற்றோரும் கடும் எதிா்ப்புத் தெரிவித்தனா். மேலும், பாண்டீஸ்வரிக்கு அவரது தாய்மாமாவுடன் திருணமும் நிச்சயம் செய்யப்பட்டது.
இதனால், மனமுடைந்த காதலா்கள் வெள்ளிக்கிழமை மளிகைக் கடையில் விஷமருந்தி மயங்கினா். இதையடுத்து, இருவரையும் அந்தப் பகுதியினா் மீட்டு, உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவா்களைப் பரிசோதித்த மருத்துவா்கள் இருவரும் ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனா்.
இந்தச் சம்பவம் குறித்து எம்.கல்லுப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தற்கொலை எண்ணம் இருப்பவா்கள், 104 எண்ணை தொடா்பு கொள்ளும்போது, அவா்களுக்கு உரிய மனநல ஆலோசனை வழங்கப்படும். மேலும், அடிக்கடி அவா்களிடம் தொடா்பு கொண்டு நண்பா்களாக பேசி, இயல்பு நிலைக்கு அவா்கள் திரும்ப வழிவகை செய்யப்படும்.