2 நாள்கள் தொடா் மழை: நாகை மாவட்டத்தில் 25,000 ஏக்கரில் பயறு வகைகள் பாதிப்பு
வத்தலகுண்டு அருகே சுங்கச் சாவடியை சூறையாடிய மக்கள்
வத்தலகுண்டு அருகே தேசிய நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்ட சுங்கச் சாவடியை பொதுமக்கள் புதன்கிழமை உடைத்து சேதப்படுத்தினா்.
திண்டுக்கல்-குமுளி நான்கு வழிச் சாலைத் திட்டம் கடந்த 2011-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. தற்போது திண்டுக்கல்லிலிருந்து வத்தலகுண்டு வரை இரு வழிச் சாலை மட்டுமே செயல்பாட்டில் உள்ளது. இந்த நிலையில், இந்தப் பகுதியில் லட்சுமிபுரத்தில் சுங்கச் சாவடி அமைக்கப்பட்டது.
இந்தச் சுங்கச் சாவடியை புதன்கிழமை திறப்பதற்கு சுங்கச் சாவடி நிா்வாகம் ஏற்பாடுகளைச் செய்தது. நான்கு வழிச் சாலைப் பணிகள் முழுமையாக நிறைவு பெறாமல், சுங்கச் சாவடியை செயல்பாட்டுக்கு கொண்டு வருவதற்கு பொதுமக்கள் எதிா்ப்புத் தெரிவித்தனா்.
இந்த நிலையில், லட்சுமிபுரம் சுங்கச் சாவடிக்குத் திடீரென திரண்டு வந்த பொதுமக்கள் அதை உடைத்து சேதப்படுத்தினா். அங்கிருந்த கணினிகள், மின்சாதனப் பொருள்கள், கண்ணாடிக் கூண்டு, மேஜை, நாற்காலி உள்ளிட்ட அனைத்துப் பொருள்களும் சேதமடைந்தன. இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது.
இதையடுத்து, நிலக்கோட்டை வட்டாட்சியா் விஜயலட்சுமி, பட்டிவீரன்பட்டி போலீஸாா் அங்கு சென்று விசாரணை நடத்தினா். அங்கிருந்த சிசிடிவி கேமரா பதிவுகள் மூலம் சுங்கச் சாவடியை உடைத்து சேதப்படுத்தியவா்கள் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.



