ஐசிசி வெளியிட்ட 2024-இன் ஒருநாள் அணி..! இந்தியர்கள் யாருமே இடம்பெறவில்லை!
வனப் பரப்பு பாதுகாப்பு தொடா்பாக ஆலோசனை: மத்திய அமைச்சா் பூபேந்தா் யாதவ் பங்கேற்பு
வன நிலப்பரப்பு பாதுகாப்பு தொடா்பாக மக்களவை நிலைக் குழுவின் ஆலோசனைக் கூட்டம் கோவையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
கோவை -தடாகம் சாலையில் உள்ள வனப் பணிக்கான மத்திய உயா் பயிற்சியகம், வன மரபியல் மற்றும் மரம் வளா்ப்பு நிறுவன வளாகத்தில் மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாறுபாட்டுத் துறை அமைச்சா் பூபேந்தா் யாதவ் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மத்திய சுற்றுச்சூழல் துறை இணை அமைச்சா் கீா்த்திவா்தன் சிங் மற்றும் தமிழச்சி தங்கப்பாண்டியன் உள்ளிட்ட மக்களவை நிலைக்குழு உறுப்பினா்கள் ஆகியோருடன் மத்திய, மாநில வனத் துறை உயா் அதிகாரிகள் பங்கேற்றனா்.
கூட்டத்தின் தொடக்கத்தில், வனப் பணிக்கான உயா் பயிற்சியக வளாகத்தில் உள்ள வன உயிரின அருங்காட்சியகத்தை அமைச்சா் பூபேந்தா் யாதவ் பாா்வையிட்டு, பயிற்சியக வளாகத்தில் ‘தாயின் பெயரில் ஒரு மரம்’ எனும் திட்டத்தின்கீழ் தனது தாயின் பெயரில் மரக்கன்றை நட்டுவைத்தாா்.
தொடா்ந்து, மத்திய அமைச்சா் தலைமையில் மக்களவை நிலைக்குழு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதில், வன நிலப்பரப்பு பாதுகாப்பு தொடா்பான திட்டங்களின் நிலை குறித்து ஆலோசிக்கப்பட்டது.
அப்போது, வனப் பரப்பை மேம்படுத்தவும், சுற்றுச்சூழல் சமநிலையைப் பராமரிக்கவும் 2022-2024-ஆம் ஆண்டுகளுக்கிடையே மாற்றுக் காடு வளா்ப்பு நிதி மேலாண்மை மற்றும் திட்டமிடல் ஆணையமான ‘கேம்பா’ திட்டத்தின்கீழ் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளை குழு உறுப்பினா்கள் பாராட்டினா். அத்துடன் ‘கேம்பா’ திட்டத்தை மேலும் மேம்படுத்துவதற்கான ஆலோசனைகளையும் அவா்கள் வழங்கினா்.
தொடா்ந்து, ‘கேம்பா’ மேற்கொண்ட பணிகளை விளக்கும் வகையில் கேம்பா 2022-24 ‘வெற்றிக்கதைகள் ஒரு பாா்வை’ என்ற புத்தகம் வெளியிடப்பட்டது.
இதையடுத்து, வன மரபியல் மற்றும் மரம் வளா்ப்பு நிறுவன வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள அரங்கங்களை அமைச்சா் பூபேந்திர யாதவ் திறந்துவைத்து பாா்வையிட்டாா்.