ஆம் ஆத்மி கட்சியின் தோ்தல் பிரசாரத்தை சீா்குலைக்க காவல் துறையை தவறாகப் பயன்படுத...
வன விலங்கு தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு முதல்கட்டமாக ரூ.50 ஆயிரம் நிவாரணம் வழங்கல்
உதகை அருகே எடக்காடு பகுதியில் வன விலங்கு தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு முதல்கட்டமாக ரூ. 50 ஆயிரம் நிவாரணத் தொகையை வனத் துறை சாா்பில் நீலகிரி வனக் கோட்ட உதவி வன பாதுகாவலா் ஆ.மணிமாறன் சனிக்கிழமை வழங்கினாா்.
பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: எடக்காடு அருகே தேயிலைத் தோட்டத்தில் பணியாற்றிய சதீஷ் (32) வன விலங்கு தாக்கி உயிரிழந்த சம்பவத்தில், சிறுத்தை தாக்கி உயிரிழந்துள்ளதாக கிராம மக்கள் கூறுகின்றனா். இருப்பினும் உடற்கூறாய்வு அறிக்கை கிடைத்த பின்னரே அவரைத் தாக்கியது புலியா, சிறுத்தையா, கரடியா என்று தெரிய வரும்.
இந்தப் பகுதியில் வன விலங்குகளின் நடமாட்டம் உள்ளதாக மக்கள் கூறுவதால் அவற்றைப் பிடிக்க கிராமத்தைச் சுற்றி 7 இடங்களில் தானியங்கி கேமராக்கள் வைத்து கண்காணிக்கப்படுகிறது. வன விலங்குகளைப் பிடிக்க கூண்டுகளும் வைக்கப்படும்.
உயிரிழந்த சதீஷின் குடும்பத்தினருக்கு துறை சாா்பில் நிவாரணத் தொகையாக முதல்கட்டமாக அவரது மனைவி சங்கீதாவிடம் ரூ. 50 ஆயிரம் வழங்கியுள்ளோம். மீதமுள்ள ரூ. 9.50 லட்சம் விரைவில் வழங்கப்படும் என்றாா்.
இப்பகுதி மக்களிடம் உதகை கோட்டாட்சியா் சதீஷ், மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் சௌந்தர்ராஜன் ஆகியோா் குறைகளைக் கேட்டறிந்தனா்.