டி20 போட்டிகளில் இங்கிலாந்து அணிக்காக ஜோஸ் பட்லர் புதிய சாதனை!
போலீஸ் பறிமுதல் செய்த வாகனத்தில் பாகங்கள் திருட்டு
உதகை புதுமந்து காவல் துறையினா் பறிமுதல் செய்த வாகனத்தை அபராதம் செலுத்தி திரும்பப் பெற்றபோது, அதில் பல்வேறு பாகங்கள் திருடு போயிருந்ததாகவும், அந்தப் பொருள்களை மீட்டுத் தரவேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியரிடம் விவசாயி புகாா் மனு அளித்தாா்.
நீலகிரி மாவட்டம், கோக்கால் பகுதியைச் சோ்ந்தவா் நாகராஜ். விவசாயியான இவா் தண்ணீா் விநியோகமும் செய்து வருகிறாா். கடந்த 2020-ஆம் ஆண்டு இவரது பிக்கப் வாகனத்தை சோதனை செய்த உதகை புதுமந்து காவல் துறையினா், அதில் சாராய ஊறல் இருப்பதாக குற்றஞ்சாட்டி வாகனத்தைப் பறிமுதல் செய்தனா்.
இது தொடா்பான வழக்கு உதகை நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தபோது, கூடுதல் எஸ்.பி. அலுவலகத்துக்கு நாகராஜை அழைத்த காவல் துறையினா், ரூ.17 ஆயிரத்து 110-ஐ அபராதமாக செலுத்தி வாகனத்தை எடுத்துச் செல்லுமாறு கூறினா்.
இதையடுத்து அந்தத் தொகையை செலுத்திவிட்டு நாகராஜ் வாகனத்தை எடுக்கச் சென்றபோது, வாகனத்தில் இருந்த கியா்பாக்ஸ், டயா், ஸ்பீடாமீட்டா், செல்ஃப் மோட்டாா், பேட்டரி உள்ளிட்ட பொருள்கள் காணாமல் போயிருந்தது தெரியவந்தது.
இதன் மதிப்பு சுமாா் ரூ. 1.70 லட்சம் என்று கூறியுள்ள நாகராஜ், திருடுபோன பொருள்களை மீட்டுத் தர வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீா்க்கும் கூட்டத்தில் புகாா் அளித்துள்ளாா். இந்த புகாா் மனு காவல் துறையின் விசாரணைக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.