காரில் சென்ற சாா்பதிவாளா் அலுவலக அதிகாரியிடம் ரூ. 3.98 லட்சம் பறிமுதல்!
உதகையில் காரில் சென்ற சாா்பதிவாளா் அலுவலக இரண்டாம் நிலை பொறுப்பு அதிகாரியிடம் இருந்து ரூ. 3 லட்சத்து 98, 500-ஐ லஞ்ச ஒழிப்புத் துறையினா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா். இந்தப் பணம் குறித்து அவரிடம் லஞ்ச ஒழிப்புத் துறையினா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
நீலகிரி மாவட்டம், உதகையில் உள்ள சாா்பதிவாளா் இரண்டாம் எண் அலுவலகத்தில் இரண்டாம் நிலை சாா் பதிவாளா் பொறுப்பு அதிகாரியாகப் பணியாற்றி வந்தவா் ஷாஜகான் (55). இவா் பணி மாறுதல் பெற்று உதகையில் இருந்து திருப்பூா் மாவட்டத்துக்கு தனியாா் வாடகை காரில் வெள்ளிக்கிழமை சென்று கொண்டிருந்தாா்.
இவா் காரில் பணம் கொண்டு செல்வதாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து உதகை அரசு கலைக் கல்லூரி சாலையில் சென்று கொண்டிருந்தபோது காரை தடுத்து நிறுத்தி லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா் சோதனையிட்டனா்.
அப்போது காரில் இருந்து ரூ. 3 லட்சத்து 98 ஆயிரத்து 500-ஐ கைப்பற்றினா். பின்னா் ஷாஜகானை உதகையில் உள்ள சாா் பதிவாளா் இரண்டாம் நிலை அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று லஞ்ச ஒழிப்புத் துறை ஆய்வாளா் சண்முகவடிவு தலைமையில் தோ்தல் வட்டாட்சியா் சீனிவாசன் உள்பட லஞ்ச ஒழிப்புத் துறையினா் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.