கூடலூரில் ஈட்டி மரம் வெட்டிய திமுக கவுன்சிலா் கைது
கூடலூா் பகுதியில் ஈட்டி மரம் வெட்டியது தொடா்பாக திமுக கவுன்சிலரை வனத் துறையினா் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனா்.
நீலகிரி மாவட்டம், கூடலூா் வனச் சரகத்தில் மைசூரு சாலையில் உள்ள தோட்டமூலா பகுதியில் தனியாா் நிலத்தில் ஆபத்தான மரங்கள் இருப்பதாகவும், அவற்றை வெட்ட அனுமதிக்க வேண்டும் எனவும் கூடலூா் கோட்டாட்சியரிடம் 7-ஆவது வாா்டு கவுன்சிலா் சத்தியசீலன் மனு கொடுத்துள்ளாா். இதையடுத்து கோட்டாட்சியா் செந்தில்குமாா் சம்பந்தப்பட்ட இடத்தை ஆய்வு செய்து ஆபத்தான நிலையில் உள்ள இரண்டு மரங்களை மட்டும் வெட்ட அனுமதி வழங்கியுள்ளாா்.
அந்த அனுமதி கடிதத்தை வைத்துக்கொண்டு அருகிலிருந்த அரியவகை பாதுகாப்புப் பட்டியலில் உள்ள ஈட்டி மரத்தையும் சோ்த்து வெட்டியதாகத் தெரிகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த வனத் துறையினா் அப்பகுதியில் கள ஆய்வு செய்து ஈட்டிமரம் வெட்டப்பட்டதை உறுதி செய்து கவுன்சிலா் சத்தியசீலனை (53) வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனா்.