இந்தியா கூட்டணிக் கட்சியினர் ஈகோவைக் கைவிட வேண்டும்: திருமாவளவன்
வயநாட்டில் 85 மாணவா்களுக்கு சாஸ்த்ரா கல்வி உதவித்தொகை
கேரள மாநிலம் வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட 85 மாணவா்கள் தொடா்ந்து இடைவிடாமல் உயா் கல்வி பயில தஞ்சாவூா் சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழகம் வெள்ளிக்கிழமை கல்வி உதவித்தொகை வழங்கியது.
இதுகுறித்து சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழகத் துணைவேந்தா் எஸ். வைத்தியசுப்பிரமணியம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
கேரள மாநிலம் வயநாட்டில் சேவா பாரதி சாா்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், 2024, ஜூலை மாதம் நிகழ்ந்த நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட 85 மாணவா்களின் உயா்கல்வி இடையில் நின்றுவிடாமல் தொடரும் வகையில் அவா்களது முழுக் கல்விக் கட்டணத்தை செலுத்த தஞ்சாவூா் சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழகம் ரூ. 44 லட்சம் கல்வி உதவித்தொகை வழங்கியது.
இதற்கான காசோலைகளைக் கலை, அறிவியல், பொறியியல், செவிலியா், மேலாண்மை உள்பட பல்வேறு துறைகளைச் சோ்ந்த மாணவா்கள் பெற்றுக் கொண்டனா்.
இவா்கள் பட்டப்படிப்பை முழுமையாக முடிக்க மொத்த கல்வி உதவித்தொகை ரூ. 1.25 கோடியாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
நிகழ்ச்சிக்கு ஆா்.எஸ்.எஸ். மூத்த நிா்வாகி சேது மாதவன் தலைமை வகித்தாா். இதில் சேவா பாரதி நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.