வரதட்சிணைக்காக மனைவி எரித்தே கொலை: “இதெல்லாம் சாதாரண விஷயம்” -கணவன் பதில்!
மனைவி எரித்துக் கொலை செய்யப்பட்டுள்ள வழக்கில் முக்கிய குற்றவாளியாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள அந்தப் பெண்ணின் கணவனை 14 நாள் நீதிமன்றக் காவலில் விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
வட இந்தியாவில் தில்லியை அடுத்துள்ள உத்தரப் பிரதேசத்தின் கிரேட்டர் நொய்டா பகுதியில் குடும்பம் நடத்தி வந்த விபின் - நிக்கி தம்பதியின் மண வாழ்க்கையில் வரதட்சிணைக்காக பெருந்துயரம் அரங்கேறியுள்ளது.
ரூ. 36 லட்சம் பணத்துக்காக மனைவியை விபின் எரித்துக் கொன்றதாகக் கூறப்படுகிறது. தனது அம்மாவை தன் கண் முன்னே விபின் எரித்துக் கொன்றதை பார்த்துக் கொண்டேயிருந்தேன் என்று இத்தம்பதியின் மழலை முகம் மாறா மகன் வாக்குமூலம் போன்று காவல் அதிகாரிகளிடம் தெரிவித்திருப்பது தலையில் இடியை இறக்குவதாய் அமைந்துள்ளது.
இதனைத்தொடர்ந்து, வழக்கின் விசாரணையில் தப்பியோட முயற்சித்த விபின் பாத்தியா போலீஸாரால் சுட்டுப்பிடிக்கப்பட்டுள்ளார்.
மகனின் கண் முன் நடந்த கொடூரம்!
சம்பவம் நடந்த இடத்தில் விபின் - நிக்கி தம்பதியின் 6 வயது மகன் இருந்துள்ளார். அவரின் கண் முன்பே இந்தக் கொடூரம் நடந்துள்ளது.
அவரிடம் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அச்சிறுவன், அவர்கள் என் தாய் மீது எதையோ ஊற்றினார்கள். பின்னர் என் தந்தை அவரை கன்னத்தில் அறைந்து, லைட்டர் கொண்டு தீயிட்டார் எனக் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக பேசிய நிக்கியின் தந்தை, முதலில் அவர்கள் ஸ்கார்ப்பியோ கார் கேட்டனர். அதனைக் கொடுத்தோம். பின்னர், புல்லட் பைக் கேட்டனர். அதனையும் கொடுத்தோம். ஆனால், தொடர்ந்து வரதட்சிணைக் கேட்டு என் மகளை அவர்கள் கொடுமைப்படுத்தியுள்ளனர்.
வலியை அனுபவித்து என் மகளின் உயிர் பிரிந்துள்ளது. அவர்கள் என் இளைய மகளைக் கொன்றுள்ளனர். இக்கொடுமைக்கு காரணமானவர்களை அரசு தண்டிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
மனைவி இறந்ததைக் குறித்து கவலையில்லை!
விபின் பாத்தியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் செய்தியாளர்களுடன் பேசும்போது, “இதில் எனக்கு துளியும் மன வேதனை இல்லை. நான் அவளைக் கொல்லவில்லை. அவள் தாமாக முன்வந்து தற்கொலை செய்திருக்கிறாள்.
கணவன்மார்களுக்கும் அவர்தம் மனைவிமார்களுக்கும் இடையில் அடிக்கடி சண்டை ஏற்படுவது சகஜம்தானே... இதெல்லாம் சாதாரண விஷயம்” என்று தெரிவித்திருக்கிறார்.
இந்த நிலையில், ஆக. 21 ஆம் தேதி நடந்த இந்தக் கொடூர சம்பவம் குறித்து, காஞ்சன் அளித்த புகாரின்பேரிலேயே காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து கணவர் விபினை கைது செய்தனர். அவரை 14 நாள் நீதிமன்றக் காவலில் விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.