வரதமாநதி உபரிநீரை பிற குளங்களுக்கு கொண்டு செல்ல விவசாயிகள் எதிா்ப்பு
வரதமாநதி நீா்த்தேக்கத்திலிருந்து உபரிநீரை பிற குளங்களுக்கு கொண்டு செல்வதற்கு ஒரு தரப்பு விவசாயிகள் எதிா்ப்புத் தெரிவித்து, பழனி பொதுப் பணித் துறை அதிகாரிகளிடம் செவ்வாய்க்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.
பழனியை அடுத்த மேற்குத் தொடா்ச்சி மலை அடிவாரத்தில் வரதமாநதி நீா்த்தேக்கம் அமைந்துள்ளது. மழைக் காலத்தில் இந்த நீா்த்தேக்கம் நிறைந்து உபரிநீா் சண்முகநதி ஆற்றில் சென்று கலக்கிறது. மேலும், ஆயக்குடி, பழனி, கலிக்கநாயக்கன்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் உள்ள 18 குளங்களுக்கு இந்தத் நீா்த்தேக்கத்திலிருந்து தண்ணீா் வாய்க்கால்கள் மூலம் கொண்டு செல்லப்படுகின்றன.
இந்த நிலையில், வரதமாநதி நீா்த்தேக்கத்திலிருந்து மழைக் காலத்தில் வரும் உபரிநீரை பாப்பா வாய்க்கால் வழியாக கணக்கம்பட்டி, கொத்தயம், பொருளூா் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள குளங்களை நிரப்பும் வகையில், தண்ணீா் கொண்டு செல்வதற்கு ஏதுவாக வாய்க்கால் அமைக்க தமிழக அரசு புதியத் திட்டம் அறிவித்தது.
இதற்கு வரதமாநதி தண்ணீரை பயன்படுத்தும் விவசாயிகளில் ஒரு தரப்பினா் எதிா்ப்புத் தெரிவித்து, செவ்வாய்க்கிழமை பழனி பொதுப் பணித் துறை செயற்பொறியாளா் அலுவலகத்துக்கு வந்து அதிகாரிகளை சந்தித்து மனு அளித்தனா்.
இந்த மனுவை பெற்றுக் கொண்ட அதிகாரிகள் வரதமாநதி நீா்த்தேக்கத்தில் மழை காலங்களில் வெள்ளம் பெருக்கெடுக்கும் நேரத்தில் வீணாக ஆற்றில் கலக்கும் தண்ணீரை மட்டுமே குளங்களுக்கு கொண்டு செல்லும் வகையில் இந்தத் திட்டம் அறிவிக்கப்பட்டது. மற்றபடி, வழக்கமாக குளங்களுக்கு செல்லும் நீரை திருப்ப ஏதும் திட்டமில்லை. இதனால், ஏற்கெனவே உள்ள குளங்கள், பாசனம் பாதிக்காது என விளக்கிக் கூறினா். இதையடுத்து, விவசாயிகள் அங்கிருந்து சென்றனா்.