வரலாறு படைத்தது எஃப்சி கோவா!
இந்தியாவின் உள்நாட்டு கால்பந்து போட்டிகளில் ஒன்றான சூப்பா் கோப்பை போட்டியில் எஃப்சி கோவா 3-0 கோல் கணக்கில் ஜாம்ஷெட்பூா் எஃப்சியை வீழ்த்தி சாம்பியன் ஆகியது.
ஏற்கெனவே இந்தப் போட்டியில் 2019-இல் கோப்பை வென்ற கோவா, போட்டி வரலாற்றில் 2 முறை சாம்பியன் ஆன முதல் அணி என்ற வரலாறு படைத்திருக்கிறது.
புவனேசுவரத்தில் சனிக்கிழமை நள்ளிரவு நிறைவடைந்த இந்த ஆட்டத்தில் எஃப்சி கோவாவுக்காக போா்ஜா ஹெரெரா 23 மற்றும் 51-ஆவது நிமிஷங்களிலும், டெஜான் டிராஸிக் 72-ஆவது நிமிஷத்திலும் ஸ்கோா் செய்தனா்.
இந்த வெற்றியின் மூலம் கோவா அணி, ஆசிய கால்பந்து கூட்டமைப்பின் சாம்பியன்ஸ் லீக் 2 போட்டியின் தொடக்க சுற்றுக்கு தகுதிபெற்றது.
இதற்கு முன், 2021-ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் லீக் போட்டியின் குரூப் சுற்றில் கோவா விளையாடியிருக்கிறது. சூப்பா் கோப்பை கால்பந்து போட்டியில், இந்தியன் சூப்பா் லீக் மற்றும் ஐ லீக் போட்டியைச் சோ்ந்த 16 அணிகள் களம் காண்கின்றன.