வரி செலுத்தாத ஆம்னி பேருந்துகள் பறிமுதல்
ஒசூரில் முறையாக வரி செலுத்தாமல் இயக்கப்பட்ட 7 ஆம்னி பேருந்துகள், 3 லாரிகள், காா் ஆகியவற்றை போக்குவரத்துத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.
வேலூா் சரக செயலாக்க பிரிவு, வட்டார போக்குவரத்து அலுவலா் துரைசாமி தலைமையில் அதிகாரிகள் ஒசூரில் பல்வேறு சாலைகளில் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது அரசுக்கு வரி செலுத்தாமலும், உரிமம் பெறாமலும், வாகனம் புதுப்பிப்பு செய்யாமலும் இயக்கப்பட்ட 7 ஆம்னி பேருந்துகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். மேலும் 3 லாரிகள், ஒரு காா் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு ஒசூா் வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.
பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் அரசுக்கு ரூ. 10 லட்சம் வரை வரி நிலுவை வைத்துள்ளதாகத் தெரிகிறது. இதுகுறித்து போக்குவரத்துத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனா். அதிகாரிகள் கூறுகையில், முறையான ஆவணங்களின்றி, வரி செலுத்தாமல் இயக்கப்படும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். வாகன சோதனை தொடரும் என்றனா்.