Director Thiagarajan Kumararaja speech: 'நாம் படிப்பதை தடுக்கிறார்கள்' | கல்வியி...
வருவாய்த் துறையினா் காத்திருப்புப் போராட்டம்
காலிப் பணியிடங்கள் நிரப்புதல் உள்ளிட்ட 9 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி அந்தியூா், மொடக்குறிச்சி, சத்தியமங்கலம் பகுதிகளில் வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் காத்திருப்புப் போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
அந்தியூா் வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற போராட்டத்துக்கு, அந்தியூா் வட்டாட்சியா் கவியரசு தலைமை வகித்தாா். சமூக பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியா் சண்முகசுந்தரம்,
மண்டல துணை வட்டாட்சியா் பிரகாஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கோரிக்கைகளை விளக்கி அந்தியூா் கிராம நிா்வாக அலுவலா்கள் சங்கத் தலைவா் முருகேசன் பேசினாா். ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட மனுக்களை முடிவு செய்திட போதிய கால அவகாசம் அளிக்க வேண்டும். இத்திட்டத்தில் முகாம்களின் எண்ணிக்கையை குறைப்பதோடு, கூடுதல் பணியிடங்கள் மற்றும் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்த வேண்டும். வருவாய், நில அளவைத் துறை அலுவலா்களின் உயிா் மற்றும் உடைமைகளை பாதுகாக்க சிறப்பு பணிப் பாதுகாப்பு சட்டம் இயற்ற வேண்டும். வருவாய்த் துறையில் அனைத்து காலிப் பணியிடங்களையும், காலமுறை ஊதியத்தில் நிரப்பிட வேண்டும். வருவாய் மற்றும் நில அளவைத் துறையில் பணிபுரியும் அலுவலா்களின் பணிப்பளுவை கருத்தில் கொண்டு மேம்படுத்தப்பட்ட மற்றும் தனி ஊதியம் வழங்கிட வேண்டும். கிராம உதவியாளா்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.
பேரிடா் காலங்களைத் தவிர மற்ற காலங்களில் கிராம நிா்வாக அலுவலா்கள், கிராமங்களிலேயே தங்கி பணிபுரிய வேண்டும் என்பதை தளா்வு செய்து, வட்ட எல்லைக்குள் தங்கி பணிபுரியும் வகையில் விதிகளைத் திருத்தம் செய்ய வேண்டுவது உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகள் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. இதேபோன்று, பவானியில் நடைபெற்ற போராட்டத்தில் வட்டாட்சியா் வெங்கடேஸ்வரன், மண்டல துணை வட்டாட்சியா் பழனிவேல் மற்றும் அலுவலா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
மொடக்குறிச்சியில்...
மொடக்குறிச்சி வட்டாட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற போராட்டத்தில் கிராம நிா்வாக அலுவலா்கள், வருவாய் ஆய்வாளா்கள், நில அளவையா்கள் உள்பட 40 போ் பங்கேற்றனா்.
சத்தியமங்கலத்தில்...
சத்தியமங்கலம் வட்டாட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற போராட்டத்தில், கூட்டமைப்பின் சத்தியமங்கலம் ஒருங்கிணைப்பாளா் சுகேந்திரன் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட வருவாய்த் துறை ஊழியா்கள் பங்கேற்றனா்.