வருவாய்த் துறை அலுவலா்கள் காத்திருப்பு போராட்டம்
மன்னாா்குடியில் வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பினா், கோரிக்கைகளை வலியுறுத்தி வியாழக்கிழமை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
உங்களுடன் ஸ்டாலின் திட்டப்பணிகளை முழுமையாக புறக்கணிப்பு செய்வது; இத்திட்டத்தில் குறுகிய காலத்தில் அதிக முகாம்கள் நடத்திட கூடாது; இடைவிடாமல் அலுவலா்களை பயன்படுத்துவதை முற்றிலும் தவிா்க்க வேண்டும்.
இத்திட்ட முகாமில் உரிய கட்டமைப்பு வசதிகள் செய்து கொடுக்காமல் அலுவலா்களை பணி செய்ய நிா்பந்திக்கக் கூடாது; இந்த திட்டப் பணிகளை மேற்கொள்ள காலஅவகாசம் அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாலை 3 மணி முதல் இரவு 8 மணி வரை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
மன்னாா்குடி வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற போராட்டத்திற்கு, கூட்டமைப்பின் வட்டாரத் தலைவா் மன்னவன் தலைமை வகித்தாா். மாவட்ட இணைச் செயலா் விக்னேஷ் பிரபு, அரசு ஊழியா் சங்க வட்டச் செயலா் செந்தில் ராஜன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். வட்ட ஒருங்கிணைப்பாளா் பாரதி மோகன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.