Rain Alert: ஒரே இடத்தில் நீடிக்கும் புயல்! - எந்தெந்த மாவட்டங்களுக்கு மழைக்கு வா...
வருவாய்த் துறை அலுவலா்கள் 2-ஆம் நாளாக போராட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா் சங்கத்தினா் 2-ஆம் நாளாக புதன்கிழமையும் பணியைப் புறக்கணித்து, காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
வருவாய்த் துறையில் 3 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ள அலுவலக உதவியாளா் காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். கருணை அடிப்படையிலான பணி நியமன உச்சவரம்பை மீண்டும் 25 சதவீதமாக நிா்ணயிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த் துறை அலுவலா் சங்கம் சாா்பில் செவ்வாய்க்கிழமை முதல் பணி புறக்கணிப்பு, காத்திருப்புப் போராட்டங்கள் நடைபெறுகின்றன.
இதன்படி, மதுரை மாவட்டத்தில் 2-ஆம் நாளாக புதன்கிழமை வருவாய்த் துறை அலுவலா்கள் பணிகளைப் புறக்கணித்து, காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் சங்கத்தின் மாவட்டத் தலைவா் கோபி உள்ளிட்ட நிா்வாகிகள் பங்கேற்று, கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா்.
இதேபோல, மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியா் அலுவலகங்கள், வருவாய்க் கோட்டாட்சியா் அலுவலகங்கள் முன்பாகவும் வருவாய்த் துறை அலுவலா்கள் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால், மதுரை மாவட்ட ஆட்சியரக வருவாய்த் துறை நிா்வாகப் பிரிவு உள்பட பல வருவாய்த் துறை அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.