Seeman : 'என்னையும் என் குடும்பத்தையும் இப்படி குதறி தின்கிறீர்களே' - உணர்ச்சி வ...
வளம் தரும் தலம்!
காசிப முனிவர் மாயை மக்கள் சூரபத்மன், தாரகன், சிங்கமுகன் ஆகிய அசுரர்கள் பிரம்மனிடம் பெற்ற வரத்தால், கடல் நடுவே வீரமகேந்திரபுரத்தை நிர்மாணித்து, 108 அண்டங்களையும் அடக்கி ஆண்டனர். தேவர்களின் பட்டினங்களையும் உரிமையாக்கினர். நாடு இழந்த இந்திரன், தேவர்கள் பிரம்மனிடம் முறையிட்டபோது, "சிவ, உமை - குமாரனால் மட்டும் அழிக்க முடியும்' என்ற வரம் இருப்பதாகக் கூறினார்.
தேவர்கள் மன்மதனை நாடினர். மனைவி ரதியுடன் சென்று மன்மதன் தவச் சோலையை அடைந்தான். புன்னை மரத்தில் மறைந்து நின்று கரும்பு வில், தேனீக்களின் நாண், தாமரை அசோகம், குவளை, மா, முல்லை மலர்களால் ஐங்கணை உருவாக்கி சிவனை நோக்கி தொடுக்க யோகநிலை மாறி குமரன் சம்பவிக்க ஏதுவான சூழல் அமைந்தது.
யோகம் தடைப்பட்டதால் கோபம் கொண்ட கயிலைநாதன் மன்மதனை நெற்றிக்கண்ணால் நோக்க, சாம்பலாகிப் போனான். ரதியும் சிவனின் பாதங்களில் கதறி அழுது கணவனை திருப்பித்தர வேண்டினாள். சிவனும் வாழ்வளித்து, அவள் கண்களுக்கு உருவமாய் தெரியவும், கிருஷ்ணாவதாரத்தின்போது உருவுடன் திருமாலின் மகனாக பிரத்யும்னனாக பிறக்க, "மாயாவதி' என்கிற பெயருடன் மணப்பாய் என்று வரம் அளித்தார். இது காமனை தகனம் செய்ததால் "காமதகனம்' எனவும் சிவனை "காமதகனர்', "காமகோபன்', "காமனைக் காய்ந்த கண்ணுதற்கடவுள்' என்றும் போற்றுகின்றனர்.
இந்த வரலாறு காளிதாசனின் குமாரசம்பவம், கந்தபுராணம், மகாஸ்காந்தம், திருமுறைகளில் பல இடங்களில் கூறப்பட்டுள்ளன. பழங்காலத்தில் இந்த விழா "உள்ளிவிழா' எனவும் வழங்கப்பட்டதாக அகநானூற்றில் குறிப்பிருக்கிறது. இந்த நிகழ்வு பல இடங்களில் ஐதீக விழாவாகக் கொண்டாடப்படுகிறது. உரிய காலத்தில் கொண்டாடினால் நல்ல விளைச்சலும், மக்கள் விருத்தியும், நோய் நீங்கி மாந்தர் நலமுடன் வாழும் சமயச் சடங்காகக் கருதப்படுகிறது.
காமதகனம் நடந்தது மயிலாடுதுறை மாவட்டத்துக்கு உள்பட்ட சீர்காழியில் இருந்து திருப்பனந்தாள் செல்லும் சாலையில் அமைந்துள்ள "கொருக்கை' எனும் ஊரிலாகும். மாசி மகத்தன்று சுவாமியும், அம்மனும் வீதியுலா வந்து தீர்த்தம் அளிக்கும் மாசி மக பிரம்மோற்சவ விழா 11 நாள்கள் சிறப்பாக நடைபெறுகிறது. இந்த ஆண்டு மார்ச் 3}இல் விழா கொடியேற்றத்துடன் தொடங்கி, 12}ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
மார்ச் 8}இல் நடைபெறும் காமதகன ஐதீக விழாவின்போது, உற்சவரான யோகீஸ்வரர் புறப்பாடாகி வந்து காமனை கண்களால் எரித்து திரும்புவார். 11}இல் திருத்தேர், 12}இல் பஞ்சமூர்த்திகள் புறப்பாடு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.