வாழும் காலத்தில் சௌகரியமாக வாழ...
மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் ஒன்று, நவதிருப்பதியில் இரண்டாவது தலம், சந்திரனுக்கு உரியது.. என்றெல்லாம் புகழப்படுவது வரகுணமங்கை விஜயாசன பெருமாள் கோயில் என்ற அருள்மிகு பரமபதநாதன் கோயிலாகும். "நத்தம்பெருமாள் கோயில்' என்றும் குறிப்பிடுகின்றனர்.
நம்மாழ்வார் இந்தக் கோயிலை "வரகுணமங்கை' என்று சொல்லாமல், திருப்புளிங்குடி, ஸ்ரீவைகுந்தம் என்னும் இரு திவ்ய தேசங்களுடன் சேர்த்து மங்களாசாசனம் செய்கிறார். தாயார் பெயராலேயே ஸ்ரீ வரகுணமங்கை என்று ஊருக்கு பெயர் ஏற்பட்டது.
கருவறையில் விஜயகோடி விமானத்தின் கீழ் வெற்றியைத் தரும் விஜயாசனத்தில் கிழக்கு நோக்கி ஆதிசேஷன் குடை பிடிக்க அமர்ந்து 4 கரங்களுடன் ஒருகால் தொங்க, ஒரு கால் மடித்துஅமர்ந்து பெருமாள்அருளுகிறார். வலப்புறம் வரகுணமங்கையும், இடப்புறம் வரகுணவல்லி தாயாரும் என இரு தாயார்கள் ஒரே கருவறையில் எழுந்தருளியுள்ளனர்.
ஐந்து நிலை ராஜ கோபுரம், கொடி மரம், பலிபீடம் ஆகியன உள்ளன. மகா மண்டபத்தில் இருந்த கோலநரசிம்மருக்கு செவ்வாய்க்கிழமைகளில் உடைத்த தேங்காயில் நெய் ஊற்றி
விளக்கேற்றும் "நீராஞ்சனம்' எனும் பரிகாரப் பிரார்த்தனை நடைபெறுகிறது.
கோயிலில் வணங்கி வெற்றி பெற்ற பாண்டியமன்னன் தன் பெயரை வரகுணபாண்டியன் என மாற்றி அரசாட்சி செய்த வரலாறு உடையது. தேவ புஷ்கரணி, அக்னி தீர்த்தம் என இரு தீர்த்தங்கள் உள்ளன.
ரோமசமுனிவர் இங்கு தவம் செய்யும்போது, அவரது சீடன் சத்தியவான் அகநாசதீர்த்தத்தில் நீராடிக் கொண்டிருந்தான். அங்கு மீன்களைப் பிடித்துக்கொண்டிருந்த மீனவன் பாம்பு தீண்டி இறந்தான். சிறிது நேரத்திலேயே விண்ணிலிருந்து இறங்கிய தேவ விமானத்தில், அவன் ஏறி சொர்க்கம் சென்றான்.
சத்தியவான் உடனே தன் குருவிடம் நடந்ததைக் கூறி, "மீனவனுக்கு சொர்க்கம் எப்படி?' என கேட்டான். ரோமச முனிவர் தனது ஞானப் பார்வையில் உணர்ந்து,
""முன்ஜென்மத்தில் விதர்ப்ப நாட்டின் விசுவாசகன் எனும் அரசனின் மகனாக இந்த மீனவன் தர்ம சிந்தனையுடன் புண்ணியச் செயல்களையும் செய்து வந்தான். தவறான நட்பால் சில தவறான முறைகளில் ஈடுபட்டதால் முற்பிறப்பில் நரகம் அடைந்தான். இவன் விஜயாசனரை வணங்கி இந்தப் பிறப்புப் புண்ணியத்தால் இங்கு உயிர் நீத்ததால் மோட்சம் செல்லும் தகுதி பெற்றான்'' என்றார்.
இந்த வரலாற்றை அறிந்த புண்ணியகோசத்தில் வசித்த வேதவித் என்ற அந்தணர் தனது பெற்றோர், குரு ஆகியோருக்கு செய்ய வேண்டிய கடமைகளை முடித்து விட்டு, "ஆஸனதை' என்னும் மந்திரத்தைச் சொல்லி திருமாலை நோக்கி தவம் செய்தார். வயோதிக வடிவில் திருமால் வந்து, சக்யம், மகேந்திரம் என்னும் இரு மலைகளுக்கு இடையில் உள்ள வரகுணமங்கை என்னும் பதியில் சென்று தவம் இயற்றுமாறு கூறினார். அவ்வாறே வேதவித்தும் கடும் தவம் புரிய திருமால் காட்சியருளினார்.
பக்தர்கள் வேண்டுதலுக்கும் காது கொடுத்து, அனைத்து நலன்களையும் நல்குபவராக "விஜயாசனப் பெருமாள்' இங்கு அருளாட்சி செய்து வருகிறார்.
இத்தலத்தில் பிரம்மாவின் கர்வத்தை அழித்த ரோமசரிஷிக்கும், எமனிடம் போராடி கணவனை மீட்டசாவித்திரிக்கும், அதர்மத்தைச் சுட்டுப் பொசுக்கும் அக்னிக்கும் பெருமாள் காட்சி கொடுத்துள்ளார்.
"இங்கு வழிபட்டால் எந்த வகை இடராக இருந்தாலும் நீங்கி சுகவாழ்வு அருள்வார் பெருமாள். வாழும் காலம் வரை சௌகரியமான வாழ்க்கையைப் பெறலாம்.
திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்கலாம். சந்திரக் கிரகப் பாதிப்புகள் நீங்க, பெருமாளுக்கு திருமஞ்சனம், வஸ்திரம் சாற்றி வழிபடலாம். நரசிம்மருக்கும் ஏலக்காய் மாலை, நீராஞ்சனம் சமர்ப்பித்து வழிபட்டால் எண்ணிய காரியங்கள் எளிதில் நிறைவேறும்' என்பது ஐதீகம்.
இந்தக் கோயிலில் பிரம்மோற்சவம், பிப்ரவரி 22 முதல் மார்ச் 5 வரை நடைபெறுகிறது. மார்ச் 4-இல் தாமிரவருணியில் தீர்த்தவாரியும், 5-இல் புஷ்பயாகமும் நடைபெறுகிறது.
கோவில் தூத்துக்குடி மாவட்டத்துக்கு உள்பட்ட ஸ்ரீவைகுண்டத்துக்கு அருகே நத்தம் என்ற ஊரில் அமைந்துள்ளது.