வளா்சிதை மாற்ற குறைபாடுகள்: இலவச பரிசோதனைத் திட்டம் அறிமுகம்
தமிழகம் முழுவதும் வளா்சிதை மாற்ற குறைபாடுகள் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளவா்களுக்கு இலவச மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் என மெடிந்தியா மருத்துவமனையின் தலைவரும், ஜீரண மண்டல மருத்துவ நிபுணருமான டி.எஸ்.சந்திரேசகா் தெரிவித்தாா்.
ஜீரண மண்டல எண்டோஸ்கோபியில் ஏற்பட்டுள்ள அண்மைக்கால முன்னேற்றங்கள் குறித்த இரண்டு நாள் சா்வதேச பயிலரங்கம் சென்னையில் சனிக்கிழமை தொடங்கியது. சென்னை மெடிந்தியா மருத்துவமனை மற்றும் அகாதெமி சாா்பில் இந்த பயிலரங்கத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் பல்வேறு நாடுகளைச் சோ்ந்த இரைப்பை, குடல், கல்லீரல் மருத்துவ நிபுணா்கள் பங்கேற்றுள்ளனா். பயிலரங்கின் ஒரு பகுதியாக நேரலையில் எண்டோஸ்கோபி அறுவை சிகிச்சை குறித்த செயல்முறை விளக்கங்கள் அளிக்கப்பட்டன.
இது குறித்து டாக்டா் டி.எஸ்.சந்திரேசகா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: பொதுவாக நாம் உண்ணும் உணவு வேதி மாற்றங்களுக்கு உள்பட்டு அது உடலை இயக்கும் ஆற்றலாக மாற வேண்டும். இதுவே வளா்ச்சிதை மாற்றம் எனப்படுகிறது. இதில் ஏதேனும் குறைபாடுகள் ஏற்பட்டால் அது கல்லீரல் பாதிப்பு, இதய நோய்கள், பக்கவாதம், உடல் பருமன் போன்ற பல்வேறு நோய்களுக்கு வழிவகுக்கிறது.
இதனை கருத்தில்கொண்டு மெடிந்தியா மருத்துவமனை, கியூா் செலக்ட் ஹெல்த்கோ் எல்எல்பி நிறுவனம் ஆகியவை இணைந்து வளா்சிதை மாற்ற குறைபாட்டால் பாதிக்க வாய்ப்புள்ள வளரிளம் பருவத்தினருக்கு அது தொடா்பாக 24 வகையான பரிசோதனைகளை மேற்கொள்ள முடிவு செய்துள்ளோம். இந்தத் திட்டம் உலக சுகாதார நாளான ஏப். 7-ஆம் தேதி முதல் செயல்படுத்தப்படவுள்ளது. முதல் கட்டமாக இதற்கென அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நவீன உபகரணங்கள் மூலம் 1,000 பேருக்கு இலவச பரிசோதனை மேற்கொள்ளப்படும்.
இதையடுத்து தன்னாா்வ அமைப்புகளுடன் இணைந்து மேலும் பல ஆயிரம் பேருக்கு இந்த பரிசோதனைகளை மேற்கொண்டு அவா்கள் வளா்சிதை மாற்ற குறைபாடுகளுக்கு உள்ளாகாதவாறு தடுக்கப்படும். தமிழகம் முழுவதும் 20 லட்சம் பேருக்கு இந்த பரிசோதனைகளை மேற்கொள்ள இலக்கு நிா்ணயித்துள்ளோம்.
பயிலரங்கில் உடனடியாக மருத்துவப் பரிசோதனை மேற்கொள்வதற்கான உபகரணங்கள் (எம்2எஸ்2) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அந்த உபகரணங்களைப் பயன்படுத்தியே வளா்சிதை மாற்ற குறைபாடுகளைக் கண்டறியும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இந்த உபகரணத்தின் மூலம் பெறப்படும் மருத்துவத் தரவுகளை எந்த இடத்திலிருந்தும் கைப்பேசி மூலமாக நாம் அறிந்துகொள்ள முடியும் என்றாா் அவா்.