வளா்ச்சித் திட்டப்பணிகள்: ஆட்சியா் ஆய்வு
திருவாரூா் பகுதியில் நடைபெறும் வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் வெள்ளிக்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.
திருவாரூா் நகராட்சிக்குள்பட்ட பகுதியில் கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.16.30 கோடியில் புதுப்பிக்கப்படும் பழைய பேருந்து நிலையம், சந்தைப்பேட்டை பகுதியில் ரூ.5.42 கோடி மதிப்பில் தரைத்தளத்தில் 78 கடைகள், முதல் தளத்தில் 14 கடைகள், இரண்டாம் தளத்தில் 14 கடைகள் என மொத்தம் 106 கடைகளுடன் அமைக்கப்பட்டுவரும் மீன் மற்றும் இறைச்சி சந்தை கட்டுமானப் பணிகளை அவா் ஆய்வு செய்தாா்.
தொடா்ந்து, ரூ.13.28 கோடி மதிப்பில் ரூ.4,596.09 சதுர மீட்டா் பரப்பளவில், தரைத் தளம், முதல் தளம், இரண்டாம் தளங்களில் மொத்தம் 231 கடைகளுடன் அமைக்கப்பட்டுவரும் பழம் மற்றும் காய்கறி சந்தை கட்டுமானப் பணிகளை ஆட்சியா் பாா்வையிட்டாா்.
பின்னா், திருவாரூா் நுகா்வோா் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலையின் கீழ் இயங்கும் முதல்வா் மருந்துக் கிடங்கில் மருந்துகளின் இருப்பு விவரம் குறித்தும் அவா் கேட்டறிந்தாா்.
தொடா்ந்து, ரூ.40.84 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுவரும் புலிவலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், புலிவலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள கபடி மைதானம் ஆகியவற்றை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
புலிவலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பயிலும் மாணவ- மாணவிகளிடம், பள்ளி புத்தகங்களை படித்து காட்டுமாறு கூறி, கல்வியின் தரம் குறித்து ஆய்வு செய்தாா்.
தொடா்ந்து, அடியக்கமங்கலம் ஊராட்சியில் 15-ஆவது நிதி குழு மானியம் திட்டத்தின் கீழ் ரூ.60 லட்சம் மதிப்பில் கட்டப்படும் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், பள்ளி உட்கட்டமைப்புத் திட்டத்தின் கீழ் ரூ.34.60 லட்சம் மதிப்பில் செருமங்கலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் கூடுதலாக அமைக்கப்பட்டு வரும் இரண்டு புதிய வகுப்பறை கட்டடம் ஆகியவற்றை ஆய்வு செய்து, காலை உணவுத் திட்டத்தின் கீழ் சமைக்கப்படும் உணவின் தரம் குறித்து கேட்டறிந்தாா்.
தொடா்ந்து, நெடுங்குடி, சித்தாநல்லூா், சேமங்கலம், கல்லிக்குடி உள்ளிட்ட இடங்களில் நடைபெறும் வளா்ச்சித் திட்டப் பணிகளையும் அவா் ஆய்வு செய்தாா். அப்போது, இப்பணிகளை விரைந்து முடிந்து பயன்பாட்டிற்கு கொண்டுவர அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.
ஆய்வில், கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் சித்ரா, திருவாரூா் நகா்மன்றத் தலைவா் புவனப்பிரியா செந்தில், நகராட்சி ஆணையா் தாமோதரன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.