Bison: ``நீங்க ஏன் இந்த மாதிரி படம் எடுக்குறீங்க? - இது அபத்தமான கேள்வி" - மேடைய...
``வழக்கில் இருந்து விடுவிக்க ரூ.3 லட்சம்'' - கையும் களவுமாக சிக்கிய நாகர்கோவில் இன்ஸ்பெக்டர்
நேசமணி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் அன்பு பிரகாஷ்
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலைச் சேர்ந்த ராஜன் என்ற சந்தை ராஜன் என்பவர் மீது நேசமணி காவல் நிலையத்தில் ஒரு வழக்கு உள்ளது. அந்த வழக்கில் இருந்து சந்தை ராஜனை விடுவிக்க 3 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டு உள்ளார் நேசமணி நகர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் அன்பு பிரகாஷ்.
முதல் தவணையாக ஒரு லட்சத்து 85 ஆயிரம் ரூபாய் கொடுத்ததாக கூறப்படுகிறது. ஆனாலும், வழக்கில் இருந்து அவனை விடுவிக்காமல் மீதி தொகையான 1,15,000 ரூபாய் தந்தால் மட்டுமே வழக்கின் குற்றப்பத்திரிகையில் பெயரை நீக்குவதாகவும், இல்லை என்றால் குற்றப்பத்திரிகையில் பெயரை சேர்க்கும் என்று கூறியுள்ளார் இன்ஸ்பெக்டர்.
இதற்குமேல் பணம் கொடுக்க விரும்பாத சந்தை ராஜன், லஞ்ச ஒழிப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் எஸ்கால் இடம் புகார் கொடுத்து உள்ளார்.

லஞ்ச பணம்
லஞ்ச ஒழிப்பு போலீசார் ரசாயன பவுடர் தடவிய ஒரு லட்சத்து 15 ஆயிரம் ரூபாயை சந்தை ராஜனிடம் கொடுத்து அனுப்பி உள்ளனர். தன்னிடம் மீதி பணம் உள்ளது என இன்ஸ்பெக்டர் அன்பு பிரகாஷுக்கு சந்தை ராஜன் தகவல் வழங்கியுள்ளார். வெள்ளமடத்தில் உள்ள தனது வீட்டில் பணத்தை கொண்டுவரும்படி இன்ஸ்பெக்டர் கூறியுள்ளார்.
சந்தை ராஜன் வெள்ளமடத்தில் உள்ள இன்ஸ்பெக்டர் அன்பு பிரகாஷ் வீட்டுக்கு நேற்று இரவு சென்று ஒரு லட்சத்து 15 ஆயிரம் ரூபாயை கொடுத்து உள்ளார்.
அப்போது லஞ்ச பணத்தை வாங்கிய அன்பு பிரகாஷை அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் எஸ்கால், உதவி ஆய்வாளர் பொன்சன், சிறப்பு உதவி ஆய்வாளர் முருகன், அருண் அசரியா உள்ளிட்டோர் அடங்கிய டீம் கையும் களவுமாக பிடித்தது.
மயக்கம்
அவரை கைது செய்து நீதிபதி முன் ஆஜர்படுத்தினர் போலீசார். பின்னர் அவரை சிறையில் அடைக்க கொண்டுசெல்லும்போது இன்ஸ்பெக்டர் மயங்கி விழுந்துள்ளார்.
அதைத்தொடர்ந்து ஆசாரிப்பள்ளத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். விரைவில் அவர் சிறையில் அடைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலுவையில் உள்ள வழக்குகள்
இன்ஸ்பெக்டர் அன்பு பிரகாஷ் சுமார் 15 ஆண்டுகளுக்கும் மேலாக கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலையங்களில் பணிபுரிந்து வருகிறார்.
இவர் களியக்காவிளை காவல் நிலையத்தில் பணிபுரிந்த போது, கொள்ளையன் ஒருவன் கொள்ளையடித்த 38 பவுன் நகைகளில் சுமார் 20 பவுன் நகைகளை திருடியதாக இவர்மீது குற்றம் சாட்டப்பட்டது.
மேலும், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறையினர் இவரது வீட்டில் சோதனை நடத்தியபோது நகைகள் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
அது தொடர்பான வழக்கும் நிலுவையில் உள்ளது என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் ரூ. 1.15 லட்சம் லஞ்சம் வாங்கி சிக்கிக்கொண்டார் இன்ஸ்பெக்டர் அன்பு பிரகாஷ்.



















