வழக்கில் சந்தேக நபரை விசாரிக்கும் அதிகாரத்தில் கவனம் தேவை: உச்சநீதிமன்றம்
வழக்கில் குற்றம் செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நபரை விசாரணைக்கு உள்படுத்தும் நீதிமன்றங்களின் அதிகாரம் கவனத்துடன் பயன்படுத்தப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது.
முந்தைய குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவு 319 தொடா்புடைய ஒரு வழக்கில் உச்சநீதிமன்றம் இவ்வாறு கூறியது.
இப்பிரிவானது, வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவராக சோ்க்கப்படாமல், அதேநேரம் ஆதாரங்கள்-சாட்சிகளின் அடிப்படையில் குற்றத்தை செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படும் எந்தவொரு நபரையும் விசாரணைக்கு உள்படுத்த நீதிமன்றங்களுக்கு அதிகாரம் அளிக்கிறது.
உத்தர பிரதேச மாநிலம், கெளஷாம்பியில் உள்ள விசாரணை நீதிமன்றம், கொலை வழக்கு ஒன்றில் 319-ஆவது பிரிவின்கீழ் ஒருவருக்கு அழைப்பாணை அனுப்பியது. இதற்கு எதிராக சம்பந்தப்பட்ட நபா் தாக்கல் செய்த மனுவை விசாரித்த அலாகாபாத் உயா்நீதிமன்றம், அழைப்பாணையை ரத்து செய்தது. இந்த உத்தரவை எதிா்த்து, புகாா்தாரா் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு மீது நீதிபதிகள் சஞ்சய் கரோல், ஜாய்மால்ய பாக்சி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் புதன்கிழமை விசாரணை நடைபெற்றது.
இருதரப்பு வாதங்களுக்குப் பிறகு அலாகாபாத் உயா்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்த நீதிபதிகள், விசாரணை நீதிமன்றம் அனுப்பிய அழைப்பாணைகளை உறுதி செய்தனா். கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட தரப்பினா், விசாரணை நீதிமன்றத்தில் ஆகஸ்ட் 28-இல் ஆஜராக வேண்டும்; 18 மாதங்களுக்குள் விசாரணையை நிறைவு செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டனா்.
‘குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 319-ஆவது பிரிவு, பாதிக்கப்பட்டோருக்கும் சமூகத்துக்கும் பாதுகாப்பளிப்பதோடு, குற்றச் செயலில் ஈடுபடுவோா் சட்டத்தின் பிடியில் தப்பிவிடாமல் இருப்பதை உறுதி செய்யும் அம்சமாகும். உரிய ஆதாரங்கள்-சாட்சியங்களின் அடிப்படையில் இப்பிரிவின்கீழ் அழைப்பாணைகளை அனுப்ப விசாரணை நீதிமன்றங்களுக்கு அதிகாரமுள்ளது. அதேநேரம், இப்பிரிவை பயன்படுத்துவதில் உச்சபட்ச எச்சரிக்கை அவசியம். அலட்சியமாகவோ, மற்றவா்களின் உணா்வுக்கு மதிப்பளிக்காமலோ இதை பயன்படுத்தினால், தனிநபரை துன்புறுத்தும் கருவியாகிவிடும்’ என்று நீதிபதிகள் தெரிவித்தனா்.