வாக்காளர் அட்டை பெற்ற பாகிஸ்தானைச் சேர்ந்த இளம் பெண்!
பாகிஸ்தானிலிருந்து இந்தியாவுக்கு குடிபெயர்ந்த 18 வயது இளம் பெண் ராதா, தில்லி தேர்தலையொட்டி வாக்காளர் அடையாள அட்டையைப் பெற்றுள்ளார்.
தேர்தல் என்ற ஜனநாயகத் திருவிழாவில் பங்கேற்பதற்கான கடமை என்பதோடு மட்டுமின்றி, தனது சொந்த நாடு என்று கூறுவதற்கும், குரல் கொடுப்பதற்குமான உரிமையாக வாக்காளர் அடையாள அட்டை மாறியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாகிஸ்தானில் இருந்து குடிபெயர்ந்து இந்தியாவுக்கு வந்தவர்களில் 300 பேர் தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்களிப்பதற்காக, வாக்காளர் அடையாள அட்டைக் கோரி விண்ணப்பித்திருந்தனர். இந்த 300 பேரில் ஒருவர் ராதா.
பாகிஸ்தானில் இருந்து 4 வயது இருக்கும்போது தனது குடும்பத்துடன் இந்தியாவுக்கு குடிபெயர்ந்துள்ளார். தற்போது 18 வயது பூர்த்தி அடைந்ததால், வாக்காளர் அட்டைக்கு விண்ணப்பித்துள்ளார்.
குடியுரிமை திருத்தச் சட்டம் 2019-ன் படி இவர்களுக்கு கடந்த மே மாதம் நாட்டில் வசிப்பதற்கான குடியுரிமை வழங்கப்பட்டது.
வாக்காளர் அட்டை கிடைத்தது குறித்து ராதா பேசியதாவது,
’’என் குடியுரிமைச் சான்றிதழை இந்த ஆண்டு பெற்றேன். சமீபத்தில் வாக்காளர் அடையாள அட்டைக்கும் விண்ணப்பித்திருந்தேன். இந்திய குடிமகளாக வாக்களிக்க உள்ளது இதுவே முதல்முறை. எந்த அரசு ஆட்சி அமைத்தாலும் எங்களை இங்கே தங்க அனுமதிப்பார்கள் என்று நம்புகிறோம் எனக் குறிப்பிட்டார்.
உள்ளூர் பிரச்னைகள் குறித்த கேள்விக்கு பதிலளித்த ராதா, இங்கு நிறைய பிரச்னைகள் உள்ளன. இளைஞர்களுக்கு போதிய வேலைவாய்ப்பு இல்லை. அதிக வேலைவாய்ப்புகள் உருவாக வேண்டும் என நினைக்கிறேன்.
பாகிஸ்தானில் விவசாய வேலைதான் செய்துவந்தோம். பின்னர் துன்புறுத்தல்கள் காரணமாக அங்கிருந்து தப்பி இந்தியாவுக்கு வந்தோம். இங்கு மகிழ்ச்சியாக உள்ளது. ஆனால் விவசாயம் செய்ய நிலம் இல்லை. யமுனா நதியோரம் குத்தகைக்கு அரசு நிலம் ஒதுக்கினால், அதில் விவசாயம் செய்து எங்கள் குடும்பத்தின் தேவைகளை பூர்த்தி செய்துகொள்வோம்’’ எனக் குறிப்பிட்டார்.
இதையும் படிக்க | பாஜகவுக்கு என்ன? ராகுலின் வியத்நாம் பயணம் குறித்து காங்கிரஸ் கேள்வி!