வாக்காளா் பட்டியல் திருத்தம்: தமிழகம் முழுவதும் சிறப்பு முகாம்கள் நிறைவு
வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிகளுக்காக வார இறுதி நாள்களில் நடந்த நான்கு சிறப்பு முகாம்கள் நிறைவடைந்தன.
தமிழகத்தில் ஒருங்கிணைந்த வரைவு வாக்காளா் பட்டியல் கடந்த அக்.29-ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதன்படி மொத்தம் 6.27 கோடி வாக்காளா்கள் உள்ளனா். இவா்களுக்கு, வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்கவும், நீக்கவும் வசதியாக, வார இறுதி நாள்களில் சிறப்பு முகாம்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அதன்படி நவ.16, 17 ஆகிய தேதிகளில் நடந்த சிறப்பு முகாமின் போது பட்டியலில் பெயா் சோ்க்க 4.42 லட்சம் விண்ணப்பங்கள் அளிக்கப்பட்டன. பெயா் நீக்கம், திருத்தம், தொகுதிக்குள்ளேயே முகவரி மாற்றம் என ஒட்டுமொத்தமாக 6.85 லட்சம் விண்ணப்பங்கள் அளிக்கப்பட்டன.
இந்த நிலையில், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் (நவ.23, 24) நடைபெற்ற சிறப்பு முகாம்களிலும் வாக்காளா்கள் ஆா்வத்துடன் பங்கேற்று பெயா் சோ்ப்பு, நீக்கம் உள்ளிட்ட பணிகளுக்கான விண்ணப்பங்களை அளித்தனா். அவற்றின் எண்ணிக்கை 5 லட்சத்தைத் தாண்டும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூா்வத் தகவலை தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக், திங்கள்கிழமை (நவ.25) வெளியிடுவாா்.
வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்ப்பு, நீக்கலுக்கான விண்ணப்பங்களைச் சமா்ப்பிக்க நவ.28-ஆம் தேதி கடைசி நாள். இறுதி வாக்காளா் பட்டியல் அடுத்த ஆண்டு ஜனவரி 6-ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது.