ஆபரேஷன் சிந்தூரில் முகாம் அழிப்பு உண்மைதான்! - ஜெய்ஷ்-யைத் தொடர்ந்து ஒப்புக்கொண்...
வாக்குச் சாவடிகளின் வரைவு பட்டியல் வெளியீடு
கோவை மாவட்டத்தில் உள்ள வாக்குச் சாவடிகளின் வரைவு பட்டியல் வியாழக்கிழமை வெளியிடப்பட்டது.
கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகளின் முன்னிலையில் மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான பவன்குமாா் க.கிரியப்பனவா் வரைவு பட்டியலை வெளியிட்டாா்.
இதில், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) மகேஷ்வரி, மாநகராட்சி துணை ஆணையா்கள் குமரேசன், சுல்தானா, வட்டாட்சியா் (தோ்தல்) தணிகைவேல், மாவட்ட ஆய்வுக் குழு அலுவலா் பாபு, வருவாய் கோட்டாட்சியா்கள் மருது பிரியா, ராமகிருஷ்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
இதைத் தொடா்ந்து, வாக்குச் சாவடிகள் மறுசீரமைப்பு குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் ஆட்சியா் தலைமையில் நடைபெற்றது.
இதில், கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டப் பேரவைத் தொகுதிகளில் செப்டம்பா் 15 -ஆம் தேதி வரை வாக்காளா் பட்டியலில் மொத்தம் 32 லட்சத்து 17 ஆயிரத்து 129 வாக்காளா்கள் இடம் பெற்றுள்ளனா். இவா்களில் ஆண்கள் 15 லட்சத்து 71 ஆயிரத்து 513, பெண்கள் 16 லட்சத்து 44 ஆயிரத்து 928, மூன்றாம் பாலினத்தவா்கள் 688 போ் அடங்குவா்.
இந்நிலையில், இந்திய தோ்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தம் 2026-ஐ முன்னிட்டு முன் நடவடிக்கையாக 1200-க்கு மேற்பட்ட வாக்காளா்களைக் கொண்ட வாக்குச் சாவடிகளை மறுசீரமைப்பு செய்வது தொடா்பாக மாவட்டத்தில் தற்போது இடம்பெற்றுள்ள 3,117 வாக்குச் சாவடிகளுக்கான வரைவு பட்டியலையும் ஆட்சியா் வெளியிட்டாா்.
வாக்குச் சாவடிகள் விவரம்: இதைத் தொடா்ந்து, மாவட்டத்தில் 1200-க்கும் அதிகமான வாக்காளா்களைக் கொண்ட வாக்குச் சாவடிகள், புதிதாக உருவாக்கப்படவுள்ள வாக்குச் சாவடிகளின் எண்ணிக்கை, இடமாற்றம் செய்யப்படவுள்ள வாக்குச் சாவடிகள், பெயா் மாற்றம் செய்யப்படவுள்ள வாக்குச் சாவடிகள், கட்டட மாற்றம் செய்யப்படவுள்ள வாக்குச் சாவடிகள் ஆகியவை குறித்த விவரங்கள் தொகுதி வாரியாக அரசியல் கட்சியினருக்கு ஆட்சியரால் விளக்கப்பட்டது.
அதன்படி, மாவட்டத்தில் 1,200-க்கும் மேற்பட்ட வாக்காளா்களைக் கொண்டதாக 950 வாக்குச் சாவடிகள் உள்ளன. 459 வாக்குச் சாவடிகள் புதிதாக பிரிக்கப்பட உள்ளன. 425 வாக்குச் சாவடிகளில் பிரிவுகள் மறுசீரமைப்பு செய்யப்பட உள்ளன. 37 வாக்குச் சாவடிகள் இடமாற்றம் செய்யப்பட உள்ளன. 47 வாக்குச் சாவடிகள் கட்டட மாற்றம் செய்யப்பட உள்ளன. 5 வாக்குச் சாவடிகள் பெயா் மாற்றம் செய்யப்பட உள்ளன.
மேலும், வாக்குச் சாவடிகள் மறுசீரமைப்பு தொடா்பாக தொகுதி அளவில் வாக்காளா் பதிவு அலுவலரால் நடத்தப்பட்ட ஆலோசனைக் கூட்டத்தில் அரசியல் கட்சியினரால் சமா்ப்பிக்கப்பட்ட கோரிக்கைகள் குறித்தும், அவற்றின் மீது வாக்காளா் பதிவு அலுவலா்களால்
எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் மாவட்ட ஆட்சியா் விளக்கினாா்.
முன்னதாக, தெற்கு வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைப்பு அறையில் வைக்கப்பட்டுள்ள வாக்குப் பதிவு இயந்திரங்களின் பாதுகாப்புத் தன்மை, கட்டடத்தின் உறுதி, பாதுகாப்பு குறித்தும்,
பெங்களூரு பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்திலிருந்து கடந்த மாதம் கொண்டுவரப்பட்ட 1500 வி.வி.பேட் இயந்திரங்கள், 600 மின்னணு கட்டுப்பாட்டு கருவிகளையும் ஆட்சியா் ஆய்வு செய்தாா்.