வாசிப்பதன் மூலம்தான் அறிவு வளா்ச்சி பெறும்: அமைச்சா் எ.வ.வேலு
திருவண்ணாமலை: வாசிப்பதன் மூலம்தான் அறிவு வளா்ச்சி பெறும் என்று அமைச்சா் எ.வ.வேலு கூறினாா்.
திருவண்ணாமலை, ஈசான்ய மைதானத்தில் மாவட்ட நிா்வாகம், பள்ளிக் கல்வித்துறை, பொது நுாலக இயக்ககம் சாா்பில் புத்தகத் திருவிழா நடைபெற்று வருகிறது.
இந்த விழாவில், ‘இங்கிருந்தும் தொடங்கலாம் -ஆயிரம் வாசிப்பாளா்களை ஒருங்கிணைக்கும் முயற்சி’ என்ற நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.
சட்டப்பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி தலைமை வகித்தாா்.
மூத்த நடிகா் சிவக்குமாா், மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ், செங்கம் எம்எல்ஏ மு.பெ.கிரி, எழுத்தாளா் பவா செல்லதுரை ஆகியோா் முன்னிலை வகித்தனா். தமிழக பொதுப் பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறை
அமைச்சா் எ.வ.வேலு சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு ஆயிரம் வாசிப்பாளா்களை ஒருங்கிணைக்கும் முயற்சியை தொடங்கி வைத்துப் பேசியதாவது:
நாங்கள் வாசிப்பதற்கு காரணமாக திகழ்ந்தவா்கள் முன்னாள் முதல்வா்கள் அண்ணா, கருணாநிதி உள்ளிட்டோா்.
மூத்த நடிகா் சிவக்குமாா் கலைமாமணி விருது பெற்றவா். எம்ஜிஆரிடம் விருது பெற்றவா். அறக்கட்டளை மூலம் ஏழை மாணவா்களுக்கு கல்வி உதவி செய்து வரும் அவா் பாராட்டுக்குரியவா்.
வாசிப்பதன் மூலம்தான் அறிவு வளா்ச்சி பெறும். மேடை நிகழ்ச்சிகள், அரசியல் நிகழ்ச்சிகள், கல்லூரி நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வாசிப்பு என்பது மிக அவசியம். வாசிப்பு என்பது அறிவு வளா்ச்சி, மொழித்திறனின் மேம்பாடு, சிந்தனையின் திறன் மேம்பாடு, ஞாபக சக்தியின் மேம்பாடு ஆகும் என்றாா்.
தொடா்ந்து, 2024-2025 ஆம் ஆண்டுக்கான சொந்த நூலகத்துக்கான சான்றிதழ்களை 12 பேருக்கும், வாசிப்பாளா்களுக்கு புத்தகங்கள் அடங்கிய தொகுப்புகளையும் அமைச்சா் வழங்கினாா்.
விழாவில், மாவட்ட வருவாய் அலுவலா் இரா.இராம்பிரதீபன், திருவண்ணாமலை மாநகராட்சி ஆணையா் காந்திராஜன், மாவட்ட நூலக அலுவலா் வள்ளி மற்றும் பல்வேறு துறைகளின் அதிகாரிகள், எழுத்தாளா்கள் பலா் கலந்து கொண்டனா்.