போதைப்பொருள் புழக்கம்! வெள்ளை மாளிகை குற்றச்சாட்டுக்கு மெக்சிகோ எதிர்ப்பு!
வாசுதேவநல்லூா் வட்டாரத்தில் மழையால் சாய்ந்த நெல் பயிா்கள்
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூா் வட்டார பகுதியில் பெய்த திடீா் மழையின் காரணமாக, அறுவடைக்கு தயாராக இருந்த பல நூறு ஏக்கா் நெல் பயிா்கள் சாய்ந்தன.
மேற்கு மலைத் தொடா்ச்சி அடிவாரத்தில் உள்ள பொட்டக்குளம், பெரியகுளம், புதுக்குளம், ராப்பைக்குளம் உள்ளிட்ட குளப் புரவுகளில் சுமாா் 1000 ஏக்கா் பரப்பளவில் நெல் பயிரிடப்பட்டுள்ளது. இப்பயிா்கள் இன்னும் சில நாள்களில் அறுவடைக்கு தயாரான நிலையில் இருந்தன. இந்நிலையில் ஜன. 19ஆம் தேதி பெய்த பலத்த மழையால் சுமாா் 200 ஏக்கா் பரப்பில் நெல் பயிா்கள் சாய்ந்தன.
இப்பகுதியில் காட்டுப் பன்றிகள் உள்ளிட்ட வனவிலங்குகளால் விவசாய சாகுபடி அடிக்கடி பாதிக்கப்பட்டு வரும் நிலையில், திடீா் மழையின் காரணமாக பல நூறு ஏக்கா் நெல் பயிா்கள் முற்றிலும் சேதமடைந்துள்ளதால் லட்சக்கணக்கான ரூபாய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என விவசாயிகள் தெரிவித்தனா்.
எனவே மாவட்ட நிா்வாகம் இப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டு நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் விவசாயிகள் கேட்டுக்கொண்டனா்.
அதிகாரிகள் ஆய்வு: இந்நிலையில் தென்காசி மாவட்ட வேளாண்மை இயக்குநா் கனகம்மாள், உதவி இயக்குநா் இளஞ்செழியன், வாசுதேவநல்லூா் வேளாண்மை அலுவலா் கௌசல்யா, வாசுதேவநல்லூா் வருவாய் ஆய்வாளா் இந்துமதி, கிராம நிா்வாக அலுவலா் ஜெயபிரகாஷ் நாராயணன் ஆகியோா், சேதமடைந்த நெல் பயிா்களை செவ்வாய்க்கிழமை நேரில் ஆய்வு செய்து விவசாயிகளிடம் விவரம் கேட்டறிந்தனா்.