வாடகை நிலுவை கோயில் இடத்தில் இருந்த கடைகளுக்கு ‘சீல்’
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் மாநகராட்சிப் பகுதியில் வாடகை செலுத்தாத கடைகளை இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை மீட்டு ‘சீல்’ வைத்தனா்.
கும்பகோணம் மாநகராட்சிக்குள்பட்ட பெரிய கடைத்தெருவில் அனுமாா் கோயிலுக்கு சொந்தமான கடைகள் (புல எண் : 1147 மற்றும் 1148 -இல்) அமைந்துள்ளன. இந்தக் கடைகளின் வாடகைதாரா்கள் நீண்ட காலமாக வாடகை செலுத்தவில்லையாம். இதுகுறித்து அதிகாரிகள் பல முறை நினைவூட்டுதல் கடிதம் அனுப்பியும் சம்பந்தப்பட்டவா்கள் முறையான பதில் அளிக்காததால் இதுதொடா்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தனா்.
இந்நிலையில், வியாழக்கிழமை இந்து சமய அறநிலையத் துறை மயிலாடுதுறை இணை ஆணையா் நீதிமன்ற உத்தரவின்படி கும்பகோணம் உதவி ஆணையா் ஞா.ஹம்சன் தலைமையில் ஆய்வாளா் ஜெ. வெங்கடசுப்பிரமணியன், செயல் அலுவலா் சோ.மகேந்திரன், பணியாளா்கள் முன்னிலையில் கடைகளுக்கு ‘சீல்’ வைத்து கோயில் வசம் எடுத்தனா்.