வாட்ஸ்ஆப்பில் கைத்தவறி அழைப்பு செல்வதைத் தடுக்கும் வசதி
செல்போனில் அரட்டை அடிக்க, பேச என பல வசதிகள் ஏற்படுத்திக்கொண்டே செல்லும் செயலிகளில் முதலிடம் வாட்ஸ்ஆப்-க்குத்தான்.
வாட்ஸ்ஆப்பில் பயனர்கள் சந்திக்கும் சிக்கல்கள், பிரச்னைகள் குறித்து தொடர்ந்து ஆய்வு செய்து, சேவையை மேம்படுத்துவதிலும் வாட்ஸ்ஆப்-க்கு முதலிடம்.
அந்த வகையில், தற்போது மீண்டும் பல வசதிகளை வாட்ஸ்ஆப் உருவாக்கி வருகிறது. தற்போது பீட்டா இணையதளத்தில் அப்டேட்கள் குறித்த தகவல்கள் வெளியாகியிருக்கிறது.
இது விரைவில் பயனர்களின் பயன்பாட்டுக்கு வந்துவிடும். அவற்றில் மிகவும் சிறப்பான சேவைகள் பற்றி..
தற்போது, வாட்ஸ்ஆப், சாட்ஸ், குழுக்கள், அழைப்புக்கான வசதிகளை மேம்படுத்தி வருகிறது.
தற்போது, விடியோ மற்றும் வாய்ஸ் கால் அழைப்புகளுக்கான ஐகான்கள், செயலியின் மேல் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
ஆனால், தற்போது, தனியே அழைப்பு மெனுவை உருவாக்கி, அதில் பல்வேறு சிறப்புகளை சேர்த்துள்ளது.
குழு அழைப்பிலும் மாற்றம்
புதிய அழைப்பு மெனுவில், ஒரு குழுவில் இருக்கும் அனைவரையும் ஒரே நேரத்தில் அழைக்காமல், குழுவில் ஒரு சில பயனர்களை மட்டும் முதலில் அழைத்து, அவர்களுடன் பேசிவிட்டு, பிறகு மற்ற அனைவரையும் குழு அழைப்பில் சேர்த்துக் கொள்ளும் வசதி வருகிறது.
எளிதாக ஒருவருக்கு அழைப்பு மேற்கொள்ளும் வசதியும் உருவாக்கப்பட்டுள்ளது.
எதிர்பாராத அழைப்புகளைத் தவிர்க்க..
கையில் தெரியாமல் பட்டு எதிர்பாராமல் சிலருக்கு அழைப்பு சென்றுவிடும் தர்மசங்கடத்தைத் தவிர்க்க அதில் ஒரு புதிய ஆப்ஷன் கொண்டுவரப்பட்டுள்ளது. ஒருவருக்கு அழைப்புக்கான பொத்தானை அழுத்திவிட்டாலும் கூட, அழைப்பை மேற்கொள்ள வேண்டுமா என்ற ஆப்ஷன் வரும். அதனை கிளிக் செய்தால் மட்டுமே அழைப்பு மேற்கொள்ளப்படும். வேண்டாம் என்றால், அதனை கேன்சல் செய்துவிடலாம். இதனால் எதிர்பாராத அழைப்புகள் செய்து தர்மசங்கடத்தில் சிக்க வேண்டாம்.
இவை அனைத்தும் தற்போது உருவாக்கத்தில் உள்ளன. விரைவில் இது பயன்பாட்டுக்கு வரும்.