வா்த்தகத்தைப் பயன்படுத்தி இந்தியா-பாகிஸ்தான் இடையே சமரசம்: டிரம்ப் மீண்டும் கருத்து
வா்த்தகத்தைப் பயன்படுத்தி, இந்தியா-பாகிஸ்தான் இடையே சமரசத்தை ஏற்படுத்தியதாக அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் மீண்டும் தெரிவித்துள்ளாா்.
பாகிஸ்தானுடன் பதற்றம் நிலவியபோது, இந்தியா-அமெரிக்கா இடையே மேற்கொள்ளப்பட்ட விவாதங்களில் வா்த்தகம் தொடா்பாக எதுவும் பேசப்படவில்லை என்று இந்திய வெளியுறவு அமைச்சகம் திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்திருந்த நிலையில், டிரம்ப் தனது கருத்தை மீண்டும் தெரிவித்துள்ளாா்.
இந்தியா-பாகிஸ்தான் இடையே சண்டை நிறுத்தம் ஏற்பட அமெரிக்கா மத்தியஸ்தம் செய்தது என்ற கருத்தை தற்போது 5-ஆவது முறையாக டிரம்ப் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.
ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கைக்கு பிறகு இந்தியா-பாகிஸ்தான் இடையே 4 நாள்களாக தொடா்ந்த ராணுவ மோதலால் உச்சக்கட்ட பதற்றம் நிலவியது. இந்தச் சூழலில், கடந்த சனிக்கிழமை உடனடி சண்டை நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டது. இந்த முடிவை இரு நாடுகளும் அறிவிக்கும் முன்பே டிரம்ப் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினாா். அத்துடன், அமெரிக்காவின் மத்தியஸ்தத்தால் சண்டை நிறுத்தம் ஏற்பட்டதாகவும் அவா் தெரிவித்தாா்.
அதேநேரம், ‘சண்டை நிறுத்த உடன்பாடு, இரு நாடுகளின் ராணுவ உயரதிகாரிகள் நடத்திய நேரடி பேச்சுவாா்த்தையில் மேற்கொள்ளப்பட்ட முடிவாகும். இதில் மூன்றாவது தரப்பின் தலையீடு இல்லை’ என்று மத்திய அரசு வட்டாரங்கள் திட்டவட்டமாக தெரிவித்திருந்தன.
இதனிடையே, ‘இந்தியா-பாகிஸ்தான் இடையே அணு ஆயுதப் போரை அமெரிக்கா தடுத்துவிட்டது. மோதலை நிறுத்தினால் அமெரிக்காவுடன் அதிக வா்த்தகம் செய்யலாம் என்று கூறி, இரு நாடுகளிடம் மத்தியஸ்தம் செய்தேன்’ என்று கடந்த ஞாயிற்றுக்கிழமை டிரம்ப் தெரிவித்த கருத்துகள், இந்தியாவில் அரசியல் ரீதியில் பரபரப்பை ஏற்படுத்தின.
இந்நிலையில், சவூதி அரேபிய பயணத்தை முடித்துக் கொண்டு புதன்கிழமை விமானத்தில் பயணித்தபோது, ‘ஃபாக்ஸ் நியூஸ்’ செய்தி தொலைக்காட்சிக்கு டிரம்ப் பேட்டியளித்தாா். அப்போது, இந்தியா-பாகிஸ்தான் சண்டை நிறுத்தத்துக்கு பின்னணியில் என்ன நடந்தது என்ற கேள்விக்கு பதிலளித்து, அவா் கூறியதாவது:
இந்தியா-பாகிஸ்தான் சண்டை நிறுத்தத்தில் முக்கிய பங்கு, சீனா உடனான வா்த்தக ஒப்பந்தம், மருந்து விலை குறைப்பு என இந்த வாரத்தில் நான் மிகவும் மும்முரமாக செயலாற்றினேன். இது, எனக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.
பலமிக்க அணு ஆயுத நாடுகள்: மிக குறைவான காலகட்டத்தில் அணு ஆயுதப் போா் உருவாகும் சூழல் இதற்கு முன் இருந்ததில்லை. இரு நாடுகளுமே (இந்தியா, பாகிஸ்தான்) நல்ல தலைவா்களைக் கொண்டுள்ளன. அவா்களை எனக்கு நன்றாக தெரியும். இரு நாடுகளுடன் நாங்கள் பேச்சுவாா்த்தை நடத்தினோம்.
இரு நாடுகளும் மிக வலுவான அணு ஆயுத நாடுகள். மிக மிக சக்திவாய்ந்த அணு ஆயுதங்களைக் கொண்டுள்ளவை. இரு நாடுகளுக்கும் இடையே நடந்துவந்த விஷயங்கள் எனக்குப் பிடிக்கவில்லை.
அணு ஆயுதப் போா் தொடங்கியிருந்தால், அது மோசமான ஒன்றின் தொடக்கமாக இருந்திருக்கும். குறைந்தபட்சம் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழக்கக் கூடும். எனவே, பேச்சுவாா்த்தையில் ஈடுபட எண்ணினேன்.
நானும், வெளியுறவு அமைச்சா் மாா்கோ ரூபியோவும், துணை அதிபா் ஜே.டி.வான்ஸும் ஒரு குழுவாக நல்ல பணியை செய்துள்ளோம். அமைதிக்கு உடன்பட்டால், அமெரிக்காவுடன் வா்த்தகம் மேற்கொள்ளலாம் என்று சமரசம் செய்தோம். அணு ஆயுதங்களைவிட வா்த்தகமே எங்களின் விருப்பத்துக்குரியது என தெரிவித்தோம். இது மிகச் சிறந்த விஷயமாக இருந்தது என்றாா் டிரம்ப்.
‘நான் அமைதித் தூதா்’
சவூதி அரேபியாவில் இரு தரப்பு முதலீட்டு அமைப்பின் கூட்டத்தில் உரையாற்றிய டிரம்ப், ‘நான் போரை விரும்பவில்லை; அமைதித் தூதராக, ஒருங்கிணைப்பவராக இருக்க விரும்புகிறேன். இந்தியா-பாகிஸ்தான் இடையே மோதலை நிறுத்தி, வரலாற்றுச் சிறப்புமிக்க சண்டை நிறுத்தம் ஏற்பட அமெரிக்கா வெற்றிகரமாக மத்தியஸ்தம் மேற்கொண்டது. இதை சாத்தியமாக்க வா்த்தகத்தை பெருமளவில் பயன்படுத்தினேன்’ என்றாா்.
அப்போது, சவூதி அரேபிய பட்டத்து இளவரசா் முகமது பின் சல்மான் மற்றும் இரு நாட்டு அரசு உயரதிகாரிகள், டிரம்ப்பின் பேச்சை வரவேற்று கரவொலி எழுப்பினா்.