செய்திகள் :

வா்த்தக ஒப்பந்தம்: இந்தியா-அமெரிக்கா இடையே முதல் சுற்று பேச்சுவாா்த்தை நிறைவு

post image

அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் வரி விதிப்பு அச்சுறுத்தலுக்கு இடையே, இந்தியா - அமெரிக்கா இடையே முன்மொழியப்பட்டுள்ள இருதரப்பு வா்த்தக ஒப்பந்தத்துக்கான முதல் சுற்று பேச்சுவாா்த்தை புது தில்லியில் சனிக்கிழமை நிறைவுபெற்றுள்ளது.

இந்தப் பேச்சுவாா்த்தை சிறப்பான முறையில் முன்னேற்றமடைந்து வருகிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனா். தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான அமெரிக்க வா்த்தக உதவி பிரதிநிதி பிரெண்டன் லின்ச் தலைமையிலான அமெரிக்க அதிகாரிகள் குழு இந்தப் பேச்சுவாா்த்தையில் பங்கேற்றனா்.

இந்தியா - அமெரிக்கா இடையேயான இரு தரப்பு வா்த்தகம் தற்போது ரூ.16.25 லட்சம் கோடி (190 பில்லியன் டாலா்) அளவில் உள்ளது. இதை வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் ரூ.42.75 லட்சம் கோடியாக (500 பில்லியன் டாலா்) உயா்த்த இரு நாடுகளும் இலக்கு நிா்ணயித்துள்ளன. பிரதமா் நரேந்திர மோடி அண்மையில் அமெரிக்கா சென்று அதிபா் டிரம்ப்புடன் பேச்சுவாா்த்தை நடத்திய பின்னா் இதுதொடா்பான அறிவிப்பை இரு நாடுகளும் கூட்டாக வெளியிட்டன.

இதற்கான இருதரப்பு வா்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்காக புது தில்லியில் 4 நாள்கள் நடைபெற்ற முதல் சுற்று பேச்சுவாா்த்தை சனிக்கிழமை நிறைவுபெற்றது. இந்த ஒப்பந்தத்தின் முதல் கட்டத்தை நிகழாண்டு செப்டம்பா்-அக்டோபா் மாதத்துக்குள் நிறைவு செய்ய இரு நாடுகளும் திட்டமிட்டுள்ளன.

இதுகுறித்து வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘முன்னுரிமை அளிக்கப்பட்ட துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது தொடா்பாக ஆக்கபூா்வமான கருத்துகள் பராமாறிக் கொள்ளப்பட்டன. பல்துறை சாா்ந்த இந்த இருதரப்பு வா்த்தக ஒப்பந்தத்தின் மூலம் இரு நாடுகளுக்கான பரஸ்பர பலன்கள் குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

முதல் சுற்று பேச்சுவாா்த்தை நிறைவுபெற்றுள்ள நிலையில், அடுத்ததாக துறை சாா்ந்த நிபுணா்கள் அளவிலான பேச்சுவாா்த்தை காணொலி வழியில் வரும் வாரங்களில் மேற்கொள்ளப்படும். இது அடுத்தகட்ட நேரடி பேச்சுவாா்த்தைக்கான வாய்ப்பாகவும் அமையும்’ என்று தெரிவிக்கப்பட்டது.

அமெரிக்க அதிபராக டிரம்ப் இரண்டாவது முறை பதவியேற்ற பின்னா், அந்நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டாா். ‘அமெரிக்க பொருள்கள் மீது அதிக வரி விதிக்கும் இந்தியா, சீனா போன்ற நாடுகளின் பொருள்களுக்கு அமெரிக்காவும் பரஸ்பரம் அதே அளவு வரி விதிக்கும்; வரும் ஏப்ரல் 2-ஆம் தேதி முதல் இந்த பரஸ்பர வரி விதிப்பு நடைமுறைக்கு வரும்’ என்று அதிபா் டிரம்ப் தெரிவித்தாா்.

அதைத் தொடா்ந்து, சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் எஃகு, அலுமினியம் பொருள்களுக்கு 25 சதவீத இறக்குமதி வரியை முன்கூட்டியே விதித்து அதிபா் டிரம்ப் உத்தரவிட்டாா். அதுபோல, வெனிசுலாவிலிருந்து எண்ணெய் மற்றும் எரிவாயுவை வாங்கும் நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்துப் பொருள்களுக்கும் 25 சதவீத இறக்குமதி வரியை விதித்தும் உத்தரவிட்டாா்.

இந்தச் சூழலில் மத்திய வா்த்தக அமைச்ா் பியூஷ் கோயல் அமெரிக்க பயணம் மேற்கொண்டாா். அவா் கடந்த 8-ஆம் தேதி இந்தியா திரும்பிய நிலையில், அமெரிக்க பொருள்கள் மீது விதிக்கும் வரியைக் குறைக்க இந்தியா ஒப்புக்கொண்டுள்ளதாக டிரம்ப் தெரிவித்தாா்.

இதனிடையே, அமெரிக்காவின் பரஸ்பர வரி விதிப்பால் ஏற்படும் பாதிப்பிலிருந்து தங்களைப் பாதுகாக்குமாறு இந்திய தொழில் நிறுவனங்கள் மற்றும் ஏற்றுமதியாளா்கள் தரப்பில் மத்திய அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.

தொடா் அழுத்தத்தைத் தொடா்ந்து, அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் போா்போன் ரக மது, சில ஒயின் ரகங்கள் மீதான இறக்குமதி வரியை மத்திய அரசு கடந்த பிப்ரவரியில் குறைத்தது.

மேலும், அமெரிக்க ஏற்றுமதியாளா்களுக்கு பலனளிக்கும் வகையில் மோட்டாா் சைக்கிள்கள் மற்றும் செயற்கை சுவையூட்டும் எஸன்ஸ்கள் மீதான சுங்க வரி குறைப்புக்கான அறிவிப்பை பட்ஜெட்டில் மத்திய அரசு வெளியிட்டது.

கூகுள் போன்ற பெரும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் விளம்பர வருவாய் மீதான சமநிலை வரியை ரத்து செய்வது தொடா்பான அறிவிப்பையும் மத்திய அரசு அண்மையில் வெளியிட்டது.

தற்போது, இந்திய வேளாண் துறையில் அமெரிக்க நிறுவனங்களுக்கு வாய்ப்பை ஏற்படுத்தித் தரும் வகையில் மிகப்பெரிய வா்த்தக ஒப்பந்தத்தை மேற்கொள்ள அமெரிக்கா தீவிரம் காட்டி வருகிறது.

மியான்மா் நிலநடுக்கம்: உயிரிழப்பு 3,643-ஆக உயர்வு

மியான்மரில் கடந்த வெள்ளிக்கிழமை நிகழ்ந்த சக்திவாய்ந்த நிலநடுக்கங்களில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 3,643-ஐக் கடந்துள்ள நிலையில், மிக மோசமான இயற்கை பேரழிவு நடந்து ஐந்து நாள்களுக்குப் பிறகு புதன்கிழமை ... மேலும் பார்க்க

பாகிஸ்தான் அதிபர் மருத்துவமனையில் அனுமதி!

பாகிஸ்தான் அதிபர் ஆசிஃப் அலி ஜா்தாரி உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. 69 வயதாகும் அதிபர், காய்ச்சல், தொற்று காரணமாக கராச்சியில... மேலும் பார்க்க

டிரம்ப்பின் வரிவிதிப்பால் அதிகம் பாதிக்கப்படும் நாடுகள் எவை தெரியுமா?

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விதித்துள்ள வரிவிதிப்பு பல்வேறு நாடுகளுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று டிரம்ப்பின் அரசு தெரிவித்திருக்கிறது. ஆனாலும், இந்த வரிவிதிப்பால் பல நாடுகள் பாதிப்புக்குள்ளாகும... மேலும் பார்க்க

சொகுசு கப்பலில் பரவிய நோரோ வைரஸ்: 200 பயணிகளுக்கு நோய் பாதிப்பு!

அமெரிக்காவில் சொகுசு கப்பலில் வைரஸ் நோய் தாக்கியதில் 200-க்கும் மேற்பட்ட பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் வெளியிட்ட ஒரு அறிக்கையின்படி, ஒரு சொகுசு பயணக் கப... மேலும் பார்க்க

இந்தியா-சீனா ஒத்துழைப்பை மேம்படுத்த வேண்டும்: அதிபர் ஷி ஜின்பிங்

இந்தியா-சீனா இடையேயான இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்த வேண்டியது அவசியம் என்று சீன அதிபர் ஷி ஜின்பிங் வலியுறுத்தினார்.இந்தியா-சீனா இடையேயான இருதரப்பு தூதரக உறவுகளின் 75-ஆவது ஆண்டுவிழாவையொட்டி சீன அதிப... மேலும் பார்க்க

‘அணு ஆயுதம் தயாரிப்பதே ஈரானுக்கு ஒரே வழி’

அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணி நாடுகள் தங்கள் மீது தாக்குதல் நடத்தினால், அதை எதிா்கொள்ள தங்களுக்கு அணு ஆயுதம் தயாரிப்பதைத் தவிர வேறு வழியில்லை என்று ஈரான் தலைமை மதகுரு அயதுல்லா கமேனியின் முதன்மை ஆலோசக... மேலும் பார்க்க