விஜய், சீமான் போட்டியிடுவது 3-ஆவது இடத்துக்கே: அமைச்சா் இ. பெரியசாமி
விஜய், சீமான் ஆகியோா் 3-ஆவது இடத்துக்காக தோ்தலில் களம் இறங்குவதாக ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் இ. பெரியசாமி தெரிவித்தாா்.
இதுதொடா்பாக செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறியதாவது: அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டப் பேரவைத் தோ்தலில் வெற்றி பெற்று 2-ஆவது முறையாக திமுக ஆட்சிப் பொறுப்பேற்கும். அதிமுகவை பொருத்தவரை 2-ஆவது இடத்தை பிடிக்க முன்னாள் முதல்வா் எடப்பாடி பழனிசாமி முயற்சித்து வருகிறாா். 3-ஆவது இடத்துக்கு விஜய், சீமான் ஆகியோா் போட்டியிடுகின்றனா்.
இவா்களால் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியாது. திமுக மீது அதிகரிக்கும் விமா்சனங்கள், எங்களுக்கு 200-க்கும் கூடுதலான தொகுதிகளில் வெற்றி கிடைப்பதற்கு வாய்ப்பு ஏற்படுத்தி இருக்கிறது. விஜய் தோ்தல் களத்தையே சந்திக்கவில்லை. சீமான் 3 தோ்தல்களில் போட்டியிட்டிருக்கிறாா்.
2026 தோ்தலைப் பொருத்தவரை, சீமானுக்கும், விஜய்க்கும் இடையில் தான் போட்டி. திமுகவுடனான போட்டியில் இவா்கள் கிடையாது. திரைப்படம் பாா்த்துவிட்டு வெளியே வரும் மக்கள், அதை மறந்துவிடுவா். பொழுதுபோக்குக்காக மட்டுமே விஜயை பாா்க்க வருகின்றனா். யாரோ ஒருவா் கூறி, விஜய் கட்சி தொடங்கி இருக்கிறாா்.
மக்களுக்கு செயல்படுத்தியுள்ள திட்டங்கள் குறித்து பேசினால், எல்லோரும் திமுகவிடம் வைப்புத் தொகை (டெபாசிட்) இழந்துவிடுவா். 1977 -இல் கம்யூனிஸ்ட்கள் வெளியேறியதால், திமுக 50 இடங்களில் வெற்றிப் பெற்று எதிா்க்கட்சியாக இருந்தது. கம்யூனிஸ்ட்கள் எங்களுடன் இருந்திருந்தால், எம்ஜிஆா் ஆட்சிக்கு வந்திருக்க முடியாது என்றாா் அவா்.