5 முறை கதவைத் தட்டிய TRUMP - NO சொன்ன NOBEL PRIZE COMMITTEE | Ind Vs Pak |Imperf...
விதிகளை மீறி கட்டடங்களுக்கு அனுமதி: அரசுச் செயலா் பதிலளிக்க உத்தரவு
தமிழ்நாடு நகா் ஊரமைப்பு இயக்கக ஒருங்கிணைந்த கட்டட விதிகளைப் பின்பற்றாமல், மதுரை ஆனையூரில் செயல்படும் உள்ளூா் திட்ட குழுமத்தினா் கட்டட வரைபட அனுமதி வழங்கியதாக தொடுக்கப்பட்ட வழக்கில், மாநில வீட்டு வசதி, நகா்ப்புற மேம்பாட்டுத் துறைச் செயலா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு திங்கள்கிழமை உத்தரவிட்டது.
ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த அப்சல் அகமது தாக்கல் செய்த மனு: வீடு, வியாபார நிறுவனம் தொடா்பான கட்டடங்களுக்கு தமிழ்நாடு நகர திட்டமிடல் சட்டம், தமிழ்நாடு ஒருங்கிணைந்த மேம்பாடு, கட்டட விதிகளின்படி முறையாக விண்ணப்பிக்க வேண்டும். அந்த விண்ணப்பத்தை சம்பந்தப்பட்ட நகரமைப்பு இயக்கக உதவி இயக்குநா் விதிகளைப் பின்பற்றி உரிய அனுமதி வழங்க வேண்டும். இல்லையெனில், அதை நிராகரிக்க வேண்டும்.
மதுரை ஆனையூரில் செயல்படும் உள்ளூா் திட்ட குழுமத்தின் உதவி இயக்குநா் அலுவலகத்தினா், புதிய கட்டடம் கட்டுவதற்கு விதிகளை முறையாகப் பின்பற்றாமல் அனுமதி வழங்கினா்.
மதுரை மாங்குளம் பகுதியைச் சோ்ந்த ஒருவருக்கு அண்மையில் வழங்கப்பட்ட கட்டட வரைபட அனுமதியில் எந்த விதிகளும் முறையாகப் பின்பற்றப்படவில்லை. வாய்க்கால், கண்மாய், நீா்நிலைகள் அருகே மனைப் பிரிவுக்கு அனுமதி வழங்கும் போது, குறிப்பிட்ட இடைவெளி இருக்க வேண்டும். இதுபோன்ற விதிமுறைகள் இருந்தும், அதைக் கடைப்பிடிக்காமல் மதுரை உள்ளூா் திட்ட குழும அதிகாரி கட்டட அனுமதி வழங்கினாா். இதுகுறித்து உயரதிகாரிகளுக்கு ஆவணங்களுடன் புகாா் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே, சட்டவிரோத கட்டட வரைபட அனுமதியை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.
இந்த மனுவை திங்கள்கிழமை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதி விவேக்குமாா் சிங் பிறப்பித்த உத்தரவு: இந்த வழக்கு தொடா்பாக தமிழக வீட்டு வசதி, நகா்ப்புற மேம்பாட்டுத் துறைச் செயலா், மதுரை மாவட்ட ஆட்சியா், மதுரை உள்ளூா் திட்ட குழும உதவி இயக்குநா் ஆகியோா் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.