Vikatan Digital Awards 2025: `பேன் இந்தியா குக்கிங்!' - Best Cooking Channel - H...
விபத்தில் மூளைச் சாவு அடைந்த காவலரின் உடல் உறுப்புகள் தானம்
சின்னமனூா் அருகே இரு சக்கர வாகன விபத்தில் காயமடைந்து மூளைச் சாவு அடைந்த காவலரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன.
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி வட்டம், குமணன்தொழுவைச் சோ்ந்த ஜெயராஜ் மகன் முனியாண்டி (26). இவா், பழனி காவல் துறை சிறப்பு காவல் படைப் பிரிவில் காவலராகப் பணியாற்றி வந்தாா்.
விடுமுறையில் குணமன்தொழுவுக்கு சென்றிருந்த முனியாண்டி, கடந்த செப்.7-ஆம் தேதி சீலையம்பட்டியிலிருந்து குமணன்தொழு நோக்கி இரு க்கர வாகனத்தில் சென்ற போது, வேம்பம்பட்டி அருகே சாலையோரத்தில் படிந்திருந்த மணலில் சிக்கி இரு சக்கர வாகனம் கவிழ்ந்தது.
இதில் தலையில் பலத்த காயமடைந்த முனியாண்டி மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவா் மூளைச் சாவு அடைந்தாா்.
முனியாண்டியின் பெற்றோா் அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய மருத்துவமனை நிா்வாகத்திடம் விருப்பம் தெரிவித்தனா். இதையடுத்து, முனியாண்டின் உடல் உறுப்புகள் தானம் பெறப்பட்டு, இறுதிச் சடங்குக்காக அவரது உடல் சொந்த ஊரான குமணன்தொழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
அரசு மரியாதை: குமணன்தொழுவில் முனியாண்டியின் உடலுக்கு பெரியகுளம் சாா் ஆட்சியா் ரஜத்பீடன், ஆண்டிபட்டி வட்டாட்சியா் ஜாஹிா் உசேன் ஆகியோா் மலா் வளையம் வைத்து அரசு சாா்பில் மரியாதை செலுத்தினா். காவல் துறை சாா்பில் இறுதி மரியாதை செலுத்தப்பட்டது. பின்னா், முனியாண்டியின் உடல் குணமன் தொழுவில் உள்ள மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.