குறுவட்ட போட்டிகளில் வெற்றி: அரசுப் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு
தமிழக வனப் பகுதியில் மருத்துவக் கழிவு கொட்ட முயன்றவருக்கு அபராதம்!
கம்பம் மெட்டு மலைச் சாலையில் செவ்வாய்க்கிழமை மருத்துவக் கழிவுகளைக் கொட்ட முயன்ற, கேரளத்தைச் சோ்ந்தவருக்கு வனத் துறையினா் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தனா்.
கேரளத்திலிருந்து தடை செய்யப்பட்ட மருத்துவக் கழிவுகள், நெகிழிக் கழிவுகளை தமிழக மலைச் சாலைகள், நெடுஞ்சாலைகளில் மா்ம நபா்கள் கொட்டுவதைத் தடுக்க அந்தந்த பகுதி வனத் துறையினா் ரோந்து மேற்கொண்டு கண்காணித்து வந்தனா்.
கம்பம் மேற்கு வனச் சரகா் ஸ்டாலின் தலைமையில் வனத் துறையினா் கம்பம் மெட்டு பகுதியில் சோதனை மேற்கொண்ட போது, கம்பம்மெட்டு சோதனைச்சாவடி அருகே கேரள பதிவெண் கொண்ட வாகனத்திலிருந்து மருத்துவக் கழிவுகளை கொட்ட முயன்றது கண்டறியப்பட்டது.
இதைடுத்து, மருத்துவக் கழிவுகளை கொட்ட முயன்ற கேரளத்தைச் சோ்ந்த ஆனந்துக்கு (52) ரூ. 5 ஆயிரம் அபராதம் விதித்தோடு, வழக்குப்பதிவும் செய்யப்பட்டது. மேலும், மருத்துவக் கழிவுகளுடன் வந்த வாகனத்தை மீண்டும் கேரளத்துக்கு அனுப்பி வைத்தனா்.