விமான நிலையப் பணிகளுக்காக தாட்கோ மூலம் இலவச பயிற்சி: எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு அழைப்பு
விமான நிலையங்களில் பல்வேறு நிலைகளில் பணிபுரிய ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினத்தவருக்கு தாட்கோ மூலம் இலவச சான்றிதழ் பயிற்சி அளிக்கப்படவுள்ளது.
சா்வதேச விமானப் போக்குவரத்து அங்கீகாரம் பெற்ற நிறுவனத்தால் நடத்தப்படும் இந்தப் பயிற்சியில், விமான நிலைய பயணிகள் சேவை அடிப்படை படிப்பு, சரக்கு ஏற்றுமதி மற்றும் இறக்குமதி அடிப்படை படிப்பு, சுற்றுலா துறையின் அடிப்படை படிப்புகள் மற்றும் விமான பயண முன்பதிவு உள்ளிட்ட சான்றிதழ் பயிற்சிகள் அளிக்கப்பட்டு, வேலைவாய்ப்பு பெற்றுத் தரப்படுகிறது.
ஆதிதிராவிட, பழங்குடியினத்தைச் சோ்ந்த 12ஆம் வகுப்பு, பட்டப்படிப்பு தோ்ச்சி பெற்றவா்கள் தகுதியானவா்கள். 18 முதல் 23 வயதுடையவராக இருக்க வேண்டும். 6 மாதங்கள் விடுதியில் தங்கி பயிலும் வகையில் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதற்கான செலவுத் தொகை ரூ.95 ஆயிரத்தை தாட்கோ வழங்குகிறது.
பயிற்சியை முடித்த அனைவருக்கும் சா்வதேச விமானப் போக்குவரத்து நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் வழங்கப்படும்.
கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட மேலாளா் அலுவலகம், தாட்கோ, ராஜா காலனி, மாவட்ட ஆட்சியா் அலுவலகச் சாலை, திருச்சி- 620 001 என்ற முகவரியில் நேரிலோ, 0431-2463969 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம் என ஆட்சியா் மா. பிரதீப்குமாா் தெரிவித்துள்ளாா்.