எதிா்கால உலகப் பொருளாதார வளா்ச்சியில் இந்தியா, சீனாவுக்கு முக்கியப் பங்கு: சிங்க...
விருதுநகர்: பெயர்த்தெடுக்கப்பட்ட பாரத மாதா சிலை; கோர்ட் கண்டனம்; மீண்டும் அதே இடத்தில் வைக்க அனுமதி!
விருதுநகரில், மதுரை-திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் மாவட்ட பா.ஜ.க தலைமை அலுவலகம் அமைந்துள்ளது. பா.ஜ.க தேசியத் தலைவர் அமித் ஷாவால் கடந்த ஆண்டு இந்த கட்டடம் திறந்து வைக்கப்பட்டது. இந்த நிலையில் மாவட்ட பா.ஜ.க தலைமை அலுவலக சுற்றுச்சுவருக்குள், அலுவலக வாசல் முகப்பில் கடந்த 2023 ஆகஸ்டு 7-ம் தேதி பாரத மாதா சிலை நிறுவப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், பாரத மாதா சிலையை அகற்றக்கோரி பா.ஜ.க.வினருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால், பட்டா நிலத்திற்குள், அதுவும் சுற்றுச்சுவர் வளாகத்துக்குள் அமைக்கப்பட்ட சிலையை அகற்றுவதற்கு கட்சியினர் மறுப்பு தெரிவித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
தொடர்ந்து வருவாய் கோட்டாட்சியர் சிவக்குமார், விருதுநகர் தாசில்தார் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகளின் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையிலும் உடன்பாடு ஏற்படவில்லை. தொடர்ந்து மாவட்ட பா.ஜ.க. அலுவலகத்தில் நூற்றுக்கணக்கான போலீஸார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர். நள்ளிரவில், பா.ஜ.க. அலுவலக பூட்டை உடைத்து உள் நுழைந்த, போலீஸார் மற்றும் அதிகாரிகள் பாரத மாதா சிலையை பெயர்த்தெடுத்து அகற்றினர். தொடர்ந்து அந்த சிலை துணி மற்றும் தார்பாலின் ஷீட்டுகளால் மூடப்பட்டு சரக்கு வாகனத்தின் மூலம் தாசில்தார் அலுவலகத்துக்கு எடுத்துச்செல்லப்பட்டு பத்திரப்படுத்தப்பட்டது.
உள் மாவட்ட அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து பா.ஜ.க. சார்பில் மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அமர்வு முன்பு விசாரணையில் இருந்து வந்தது. இந்நிலையில் இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அதன்படி, ``தனியார் இடத்துக்குள் இருந்த பாரத மாதா சிலையை அரசு அதிகாரிகள் அத்துமீறி நுழைந்து பெயர்தெடுத்துச் சென்றிருப்பது விசாரணையின் மூலம் நிரூபணம் ஆகிறது. அழுத்தத்தின் காரணமாக அதிகாரிகள் அத்துமீறி நடந்திருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. இது கண்டனத்திற்குரியது. நாம் சமூக சமத்துவம் மற்றும் ஒருமைப்பாடு உடைய நாட்டில் வாழ்ந்து வருகிறோம். இது போன்றதொரு சம்பவம் எதிர்காலத்தில் நடக்கக் கூடாது. ஆகவே தனியாரிடத்திலிருந்து பெயர்தெடுக்கப்பட்ட பாரத மாதா சிலையை திரும்ப ஒப்படைக்க வேண்டும். மனுதாரர், பாரத மாதா சிலையை மீண்டும் அதே இடத்தில் நிறுவிக் கொள்ளலாம்" என தன் தீர்ப்பில் கூறியிருக்கிறார்.