`உள்துறை, நிதித்துறை' சேர்த்து கேட்கும் ஷிண்டே; அமித் ஷாவுடன் பட்னாவிஸ், அஜித்பவ...
விரைவு ரயில் வேகம் குறைப்பு: தமிழக எம்.பி.க்கள் கேள்வி
நமது சிறப்பு நிருபர்
நாடு முழுவதும் பல்வேறு மார்க்கங்களில் அதிவிரைவு ரயில் திட்டங்கள் தாமதமாகி வருவது குறித்தும் விரைவு ரயில்களின் வேகம் குறைக்கப்பட்டது குறித்தும் மக்களவையில் தமிழகத்தைச் சேர்ந்த எம்.பி.க்கள் தரணிவேந்தன், சி.என். அண்ணாதுரை, கலாநிதி வீராசாமி, டி.எம். செல்வகணபதி உள்ளிட்டோர் கேள்வி எழுப்பினர்.
சேலம் தொகுதி உறுப்பினர் டி.எம். செல்வகணபதி, வந்தே பாரத் ரயிலின் முன்மாதிரி ஸ்லீப்பர் வகுப்பு பெட்டிகளில் மாற்றம் செய்யப்படுவது அதன் உற்பத்திச் செலவை உயர்த்தியுள்ளதா என்றும் இந்த ரயில்களுக்கான வடிவமைப்பு மாற்றத்துக்கு ரஷியாவின் கைநெட் நிறுவனத்துடன் ரயில் விகாஸ் நிகாம் உடன்பாடு செய்துள்ளதா என்றும் கேள்வி எழுப்பியிருந்தார்.
இதேபோல, தமிழகம் உள்பட நாடு முழுவதும் பகுதியளவு அதிவேக மற்றும் விரைவு ரயில் திட்டங்களின் தற்போதைய நிலை குறித்து திமுக உறுப்பினர்கள் எம்.எஸ். தரணிவேந்தனும் (ஆரணி) சி.என். அண்ணாதுரையும் (திருவண்ணாமலை) கேள்வி எழுப்பியிருந்தனர்.
இவர்களுக்கு ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் புதன்கிழமை அளித்துள்ள எழுத்துபூர்வ பதிலில், "டிச. 2 நிலவரப்படி 136 வந்தே பாரத் ரயில் சேவைகள் அகல ரயில் பாதை மின்மய வலையமைப்பில் இணைந்துள்ளன. தற்போது 10 வந்தேபாரத் ஸ்லீப்பர் வகுப்பு பெட்டிகளுடன் கூடிய ரயில்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
விரைவில் மாதிரி ரயில் சோதனை ஓட்டத்துக்கு விடப்படும். கூடுதலாக 50 வந்தேபாரத் ஸ்லீப்பர் பெட்டிகள் சென்னை ரயில் பெட்டிகள் தொழிற்சாலையில் தயாரிக்கப்படும்.
தாமதத்துக்கான காரணம்:
தமிழகத்தில் 22 ரயில் திட்டங்கள் நிலுவையில் உள்ளன. நிலம் கையகப்படுத்துவதில் சிக்கல் நீடிப்பதால் இத் திட்டங்கள் தொய்வை சந்தித்துள்ளன.
இந்தியாவில் தற்போது இயக்கப்படும் 136 வந்தே பாரத் ரயில் சேவைகளில் 16 ரயில்கள் தமிழகத்தில் இருந்தவாறும் அதன் பல்வேறு மாவட்டங்கள் வழியாகவும் இயக்கப்படுகின்றன.
வேகம் குறைப்பு ஏன்?:
10 ஆண்டுகளுக்கு முன்பு 31 கி.மீ. தூரத்துக்கு மட்டுமே அதிகபட்சமாக 110 கி.மீ. வேகத்தில் ரயில்கள் இயக்கப்பட்டன. தற்போது 80 ஆயிரம் கி.மீ தொலைவுக்கு மேம்படுத்தப்பட்டுள்ளது. சில இடங்களில் ரயில்கள் பாதுகாப்பு காரணங்களுக்காகவும் ரயில் பாதை திட்டப் பணிகள் நடைபெறுவதன் காரணமாகவும் ரயில்கள் குறைந்த வேகத்தில் இயக்கப்படுகின்றன. பணிகள் முடிந்தவுடன் பழைய வேகத்திலேயே ரயில்கள் இயக்கப்படும்' என்று ரயில்வே அமைச்சர் தெரிவித்துள்ளார்.