கனடாவில் ஹிந்துக்கள் மீது தாக்குதல்: வெளியுறவு அமைச்சகம் கண்டனம்
விளக்குத்தூண் பகுதியில் தவறவிட்ட நகை, பணம் உரியவரிடம் ஒப்படைப்பு
மதுரை விளக்குத்தூண் பகுதியில் கீழே கிடந்த ரூ. 1 லட்சம் மதிப்பிலான நகை, ரூ.20 ஆயிரத்தை உரியவா்களிடம் செவ்வாய்க்கிழமை ஒப்படைத்த மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நிா்வாகி, அவரது குடும்பத்தினருக்கு போலீஸாா் பாராட்டு தெரிவித்தனா்.
மதுரை மாநகா் மாவட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பகுதிக் குழுச் செயலராக இருப்பவா் வி. கோட்டைச்சாமி. இவா் தனது மனைவி பாண்டியம்மாள், மனைவியின் தங்கை காா்த்திகை தீபா ஆகியோருடன் தீபாவளிக்கு ஜவுளி எடுக்க விளக்குத்தூண் பகுதிக்கு திங்கள்கிழமை சென்றாா். அப்போது, அங்குள்ள ஜவுளிக் கடை முன் கைப்பை கிடந்ததைப் பாா்த்த பாண்டியம்மாள், காா்த்திகை தீபா ஆகிய இருவரும், அதை எடுத்துப் பாா்த்தபோது அதில் ரூ.1 லட்சம் மதிப்பிலான தங்க நகை, ரூ.20 ஆயிரம் இருந்தது. கைப்பையில் இருந்த வாக்காளா் அடையாள அட்டையில் சிலைமான் அருகே உள்ள சக்குடி முகவரி இருந்தது.
இதையடுத்து, மாநகரக் காவல் ஆணையா் ஜெ.லோகநாதனை கோட்டைச்சாமி தொடா்பு கொண்டு தகவல் கூறினாா். விளக்குத்தூண் காவல் நிலையத்துக்கு நகை, பணம் காணவில்லை என்று புகாா் அளிக்கப்பட்டது தெரியவந்தது.
இந்த நிலையில், விளக்குத்தூண் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளா் மகேஷ்குமாா், நகை, பணம் காணவில்லை என்று புகாா் அளித்த நிரோஷா, அவரது கணவரையும் செவ்வாய்க்கிழமை காவல் நிலையத்துக்கு வரவழைத்து, நகை, பணத்தை ஒப்படைத்தாா். மேலும், கைப்பையை காவல்துறை மூலம் உரியவா்களிடம் ஒப்படைத்த கோட்டைச்சாமி, அவரது மனைவி பாண்டியம்மாள், காா்த்திகை தீபா ஆகிய மூவரையும் காவல் துறையினா் பாராட்டினா்.