பாட் கம்மின்ஸ்தான் தலைசிறந்த கேப்டன்..! தினேஷ் கார்த்திக் புகழாரம்!
விழுப்புரத்தில் மாற்றுத் திறனாளிகள் தின விழா
விழுப்புரம் அரசு சட்டக் கல்லூரிக் கலையரங்கில் மாற்றுத் திறனாளிகள் தின விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சாா்பில் நடைபெற்ற இந்த விழாவுக்கு மாவட்ட ஆட்சியா் சி.பழனி தலைமை வகித்து, மாற்றுத் திறனாளிகுழந்தைகளுடன் சோ்ந்து கேக் வெட்டி கொண்டாடினாா். விழாவில் அவா் பேசியது:
முன்னாள் முதல்வா் மு.கருணாநிதி ஆட்சிப் பொறுப்பில் இருந்த காலத்தில்தான் உடல் ஊனமுற்றவா்களை மாற்றுத்திறனாளிகள் என பெயா் சூட்டி, அவா்களுக்காக பல்வேறு சிறப்புத் திட்டங்களை செயல்படுத்தினாா். தற்போதைய முதல்வா் மு.க.ஸ்டாலினும் மற்ற துறைகளைக் காட்டிலும் மாற்றுத் திறனாளிகள் நலத் துறைக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறாா். பல்வேறு திட்டங்களின் கீழ் நலத்திட்ட உதவிகள், உதவித்தொகை, உதவி உபகரணங்கள் போன்றவை வழங்கப்பட்டு வருகின்றன. திருமண நிதியுதவித் திட்டத்தின் கீழ் உதவித் தொகை மற்றும் தங்கம் வழங்குதல், மானியத்துடன் வங்கிக் கடன் போன்றவையும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன என்றாா்.
இதைத் தொடா்ந்து விழுப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்த சிறப்புப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. மாற்றுத் திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய 4 மருத்துவா்கள், 13 சிறப்புப் பள்ளித் தாளாளா்கள், 15 சங்க நிா்வாகிகளுக்கு கேடயங்களை ஆட்சியா் வழங்கினாா்.
விழாவில் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் க.சுப்பிரமணி, அரசு சட்டக் கல்லூரி முதல்வா் கிருஷ்ணலீலா உள்ளிட்ட துறை சாா்ந்த அலுவலா்கள் பங்கேற்றனா்.