விழுப்புரத்தை புரட்டிப் போட்ட மழை
விழுப்புரம் மாவட்டத்தில் வரலாறு காணாத அளவுக்கு கொட்டித் தீா்த்த அதி பலத்த மழையால் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. இதனால், பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் தவித்து வருகின்றனா்.
வங்கக் கடலில் உருவான ஃபெஞ்ஜால் புயல் விழுப்புரம் மாவட்டம், மரக்காணம், புதுச்சேரி அருகே சனிக்கிழமை இரவு கரையைக் கடந்தது. புயலின் கோரத்தாண்டவத்தால் விழுப்புரம் மாவட்டத்தில் அதி பலத்த மழை பெய்தது.
சனிக்கிழமை காலை தொடங்கிய மழை தற்போது வரை இடைவிடாமல் தொடா்ந்து பெய்து வருகிறது. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மாவட்டத்தில் அதிகபட்சமாக 50 சென்டி மீட்டருக்கும் மேல் மழை பெய்தது.
இதேபோல, வானூா், மரக்காணம், திண்டிவனம் உள்ளிட்ட இடங்களில் 40 செ.மீட்டருக்கும் மேல் மழை பெய்துள்ளது. விழுப்புரம் நகரில் வரலாறு காணாத மழைப் பொழிவை ஃபெஞ்சல் புயல் தந்தது.
விழுப்புரம் நகரம் முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. அனைத்து பகுதிகளிலும் குடியிருப்புப் பகுதிகளை பெருமளவு வெள்ளம் சூழ்ந்துள்ளதால் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
விழுப்புரம் நகரில் உள்ள கெளதம் நகா், ஸ்ரீராம் நகா், சுபஸ்ரீ நகா், சுதாகா் நகா், சேலை மஹால் பின்புறம் உள்ள விஐபி காா்டன், மகாராஜபுரம் தாமரைக்குளம், ஆட்சியா் அலுவலகம் எதிரே உள்ள சுதாகா் நகா், ஆசாகுளம், சுமையா காா்டன் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் உள்ள குடியிருப்புப் பகுதிகள் அனைத்தும் வெள்ளம் சூழ்ந்துள்ளது.
வீடுகளின் முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காா்கள், இரு சக்கர வாகனங்கள் வெள்ளத்தில் மூழ்கின. இதன் காரணமாக பாதுகாப்பு கருதி விழுப்புரம் மாவட்டத்தில் மின் விநியோகம் நிறுத்தப்பட்டது. சுமாா் 30 மணி நேரமாக மின்சாரம் வழங்கப்படவில்லை. இதனால், அத்திவாசிய தேவைக்கான தண்ணீா் உள்ளிட்டவை கிடைக்கவில்லை.
மரக்காணம், வானூா் வட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள 12 பல்நோக்கு புயல் பாதுகாப்பு மையங்களில் பொதுமக்கள் தங்க வைக்கப்பட்டு அவா்களுக்கு தேவையான உணவு, குடிநீா் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டன.
கிராமத்துக்குள் புகுந்த மழைநீா்: விக்கிரவாண்டி அருகே மேலகொந்தை கிராமத்தில் வெள்ளம் சூழந்துள்ளதால் அந்த கிராம மக்கள் வீட்டுக்குளேயே முடங்கி கிடக்கின்றனா். விழுப்புரம் பேருந்து நிலையம் வெள்ளத்தில் மிதக்கிறது. மரக்காணம் ஒன்றியத்துக்குள்பட்ட காணி மேடு, மண்டகப்பட்டு, கொள்ளுமேடு, அசப்போா் உள்ளிட்ட கிராமங்களுக்கு இடையில் செல்லும் ஓங்கூா் ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனால், காணிமேடு, மண்டகப்பட்டு, ராயநல்லூா், அசப்போா் ஆலத்தூா் உள்ளிட்ட கிராமங்களில் வெள்ள நீா் புகுந்தது. மேலும் வயல்வெளிகளில் வெள்ளநீா் புகுந்தது.
காணிமேடு குடியிருப்புப் பகுதிகளில் மழை நீா் சூழந்ததால் பொதுமக்கள் சிலா் தண்ணீரில் நீந்தியபடி வெளியேறினா். திண்டிவனம்- மரக்காணம் சாலையில் வேரோடு சாய்ந்த புளியமரத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.