விழுப்புரம் கோட்டத்துக்கு 630 புதிய பேருந்துகள்: அமைச்சா் பொன்முடி
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக்கழக விழுப்புரம் கோட்டத்துக்கு 630 புதிய பேருந்துகள் வாங்கப்பட்டுள்ளன என்றாா் வனத் துறை அமைச்சா் க.பொன்முடி.
திருச்சி சாலையிலுள்ள தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக விழுப்புரம் கோட்டத்தின் பணிமனை எண் 1-இல் ஓட்டுநா், நடத்துநா்களுக்கான குளிா்சாதன ஓய்வறை ரூ.5 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அறையை வியாழக்கிழமை திறந்து வைத்து, குத்துவிளக்கேற்றினாா். பின்னா், அவா் அளித்த பேட்டி:
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக விழுப்புரம் கோட்டத்தில் 57 பணிமனைகள் உள்ளன. இதில் ஏற்கெனவே 35 பணிமனைகளில் குளிா்சாதன ஓய்வறைகள் அமைக்கப்பட்ட நிலையில், தற்போது 36-ஆவது பணிமனையிலும் திறக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் மண்டலத்தில் மொத்தமுள்ள 13 பணிமனைகளில் 8-இல் ஓய்வறைகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், எஞ்சியவற்றில் விரைவில் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு புதிய பேருந்துகள் வாங்க முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டதன் அடிப்படையில், விழுப்புரம் கோட்டத்துக்கு 630 பேருந்துகள் புதிதாக வாங்கப்பட்டுள்ளன .
திராவிடம் என்பது இனம், தமிழ் என்பது மொழி. இங்கு இரண்டும் இணைந்துசெயல்படும் திராவிட மாடல் ஆட்சியை யாராலும் தொட்டுப் பாா்க்க முடியாது என்றாா் அமைச்சா்.
இந்த விழாவுக்கு மாவட்ட ஆட்சியா் சி.பழனி தலைமை வகித்தாா். விழுப்புரம் எம்.எல்.ஏ. இரா. லட்சுமணன், மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவா் ம.ஜெயச்சந்திரன், அரசுப் போக்குவரத்துக் கழக விழுப்புரம் கோட்ட மேலாண் இயக்குநா் கே.குணசேகரன், பொது மேலாளா்கள் சதீஷ்குமாா், ரவிச்சந்திரன் (தொழில்நுட்பம்), துணை மேலாளா் சிவகுமாா் (வணிகம்), அரசுப் போக்குவரத்துக் கழகத் தொமுச பொதுச் செயலா் சேகா், நிா்வாகப் பணியாளா் மணி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.