விழுப்புரம் - தஞ்சாவூர் வரை 2 வழி ரயில் பாதையாக மாற்ற வேண்டும்: தொல்.திருமாவளவன்
சிதம்பரம்: விழுப்புரம் -தஞ்சாவூர் வரை உள்ள ஒரு வழி ரயில் பாதையை, 2 வழி ரயில் பாதையாக மாற்ற வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் எம்.பி. வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சிதம்பரம் ரயில் நிலையத்தில் மத்திய அரசின் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் ரூ. 6 கோடி செலவில் புனரமைக்கப்பட்ட சிதம்பரம் ரயில் நிலைய திறப்பு விழா வியாழக்கிழமை காலை நடைபெற்றது.
பாரதப் பிரதமர் நரேந்திர மோடி காணொளி தொலைக்காட்சி மூலம் வியாழக்கிழமை காலை புனரமைக்கப்பட்ட ரயில் நிலையத்தை திறந்து வைத்தார். இது தொடர்பாக சிதம்பரம் ரயில் நிலையத்தில் நடைபெற்ற தொடக்க விழாவில் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் தொல். திருமாவளவன் பங்கேற்று பேசினார்.
அப்போது, சிதம்பரம் வழியே செல்லும் அனைத்து விரைவு ரயில்களும் நின்று செல்ல வேண்டும் என அவ்வப்போது அமைச்சரை சந்தித்து கோரிக்கை மனு அளித்திருக்கிறோம். விழுப்புரத்தில் இருந்து தஞ்சாவூர் வரை ஒரு வழி பாதையாக தான் இருக்கிறது. இதனை இரண்டு வழி பாதையாக மாற்ற வேண்டும்.
டாஸ்மாக் பார் டெண்டர் விடுவதில் ரூ.100 கோடி முறைகேடு: அமலாக்கத் துறை
இதற்கு தோராயமாக ரூ. 5,800 கோடி செலவாகும் என ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆகவே விழுப்புரத்திலிருந்து தஞ்சாவூர் மற்றும் காரைக்கால் வரை இரண்டு வழி ரயில் பாதையாக மாற்ற வேண்டும். மேலும் சிதம்பரத்திலிருந்து காட்டுமன்னார்கோயில், ஜெயங்கொண்டம் வழியாக அரியலூர் வரை புதிய ரயில் பாதை அமைக்க வேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது. இதனையும் மத்திய அரசின் கவனத்திற்கு எடுத்துச் சென்று உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
போக்குவரத்து வசதியுள்ள ஒரு மாநிலம்தான் பொருளாதாரத்தில் வளர்ச்சி அடையும். தென்மண்டல ரயில்வே வளர்ச்சி என்பது இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி. மண்டல ரயில்வே துறை வளர்ச்சி அடைந்திருப்பதை போல தென் மண்டல ரயில்வேயும் வளர்ச்சி அடைய வேண்டும். அதற்கு கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்து கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என மத்திய ரயில்வே அமைச்சகத்துக்கு திருமாவளவன் வேண்டுகோள் வைத்துள்ளார்.
நிகழ்ச்சியில் காட்டுமன்னார்கோயில் சட்டப்பேரவை உறுப்பினர் ம.சிந்தனை செல்வன், கடலூர் மேற்கு மாவட்ட பாஜக தலைவர் தமிழழகன், விசிக மாவட்டச் செயலாளர்கள் அரங்க.தமிழ் ஒளி, மணவாளன், ரயில் பயணிகள் நலச் சங்க நிர்வாகிகள் ஏ.வி. அப்துல் ரியாஸ், ஏ.சிவராம வீரப்பன், அம்பிகாபதி உள்ளிட் டோர் பங்கேற்றனர்.