சென்னைக்கு குடிநீர் வழங்கும் புழல் ஏரியின் நீர்மட்டம் உயர்வு; உபரிநீர் திறப்பு |...
விழுப்புரம்: பச்சிளம் ஆண் குழந்தை கழிவறை கோப்பையில் அழுத்தி கொடூரக் கொலை - தாயை தேடும் போலீஸ்
விழுப்புரம் முண்டியம்பாக்கத்தில் இயங்கி வரும் அரசு மருத்துக் கல்லூரி மருத்துவமனைக்கு, நாள்தோறும் நூற்றுக்கணக்கான மக்கள் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர்.
அதேபோல அங்கு இயங்கும் பிரசவ வார்டில் சுமார் 100 பேர் உள் சிகிச்சைப் பிரிவிலும், நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் வெளிப்புற சிகிச்சைக்கும் வந்து செல்வார்கள். நேற்று காலை அந்த வார்டை சுத்தம் செய்த துப்புரவுப் பணியாளர் பத்மாவதி என்பவர், அதன்பிறகு கழிவறையை சுத்தம் செய்வதற்காக சென்றார்.
அப்போது அங்கிருந்த ஒரு இந்தியக் கழிவறை முழுவதும் இரத்தம் சிதறியிருந்தததையும், கழிவறைக் கோப்பைக்குள் தலை அழுத்தப்பட்டு, கால்கள் வெளியில் நீட்டிக் கொண்டிருந்த நிலையில் பச்சிளம் குழந்தை கிடந்ததையும் பார்த்து அதிர்ந்து போனார்.

அதையடுத்து அவர் மருத்துவமனை நிர்வாகத்திற்கு தகவல் அளித்ததும், மருத்துவ அதிகாரி ரவிக்குமார் அவர்கள் விக்கிரவாண்டி போலீஸாருக்கு தகவல் அளித்தார். அதனடிப்படையில் அங்கு சென்ற போலீஸார் குழந்தையின் சடலத்தைக் கைப்பற்றி, உடற்கூராய்வுப் பிரிவுக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து அந்தக் குழந்தையின் தாய் யார், எதற்காக கொலை செய்தார் என்பது குறித்து விசாரணை செய்து வருகின்றனர். அதேபோல மருத்துவமனையின் நுழைவு வாயில் மற்றும் பிரசவ வார்டின் வெளிப்புறத்தில் இருக்கும் சி.சி.டி.வி காட்சிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர்.
தொப்புள் கொடி கூட அறுக்கப்படாத ஆண் குழந்தை கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவத்தால், அதிர்ந்து நிற்கிறது மருத்துவக் கல்லூரி நிர்வாகம்.