துபையில் மட்டுமே விளையாடும் இந்திய அணி; நியூசிலாந்து வீரர் கூறுவதென்ன?
'விவசாயத்துல அவ்வளவு லாபம் இல்லை; ஆனா கடையில...' - பகுதி நேர விவசாயி; முழு நேர வியாபாரியின் கதை!
திருநெல்வேலி நீதிமன்ற சாலையை கடக்கும் எவரும் இந்தத் தள்ளுவண்டி கடையை காணாமல் கடந்திருக்க வாய்ப்பே இல்லை. நெல்லை மாவட்ட நீதிமன்ற வளாகத்தின் எதிரிலுள்ள பேருந்து நிலையத்திற்கு மிக அருகில் தள்ளுவண்டி கடை வைத்து கரும்புச்சாறு, இளநீர் வியாபாரம் செய்து கொண்டிருக்கிறார் பலவேசமுத்து.
20 ஆண்டுகாலமாக நீதிமன்றம் எதிரே கடை நடத்தி வரும் இவர் பெரும்பாலும் பிஸியாகவே இருப்பார். எப்போதாவது கடையில் வாடிக்கையாளர்கள் இல்லாமல் இருந்தால்... அந்த நேரத்தில் தீவிரமாகச் செய்தித்தாள்களைப் புரட்டிக்கொண்டு இருப்பார்.
வழக்கம்போல, அன்றைய தினமும் மிக பிஸியாக சுழன்று கொண்டிருந்த பலவேசமுத்துவிற்கு சின்ன இடைவேளை கிடைத்தபோது, அவரிடம் பேச்சைத் தொடங்கினோம்.

'என்னிடம் பேச என்ன இருக்கிறது?' என சிறிது தயக்கத்தோடு பேச தொடங்கிய அவர், "என் பெயர் பலவேசமுத்து. 20 வருசமா இங்கதான் கடை போட்டுருக்கேன். என்னோட பூர்வீகம் பருத்திப்பாடு கிராமம். அங்கதான் வீடு. என்னோட மனைவி இந்திராணி விவசாயக் கூலி. இங்கே கடை போட்டாலுமே, பகுதி நேரமா விவசாயமும் செஞ்சுட்டு இருக்கேன்.
தினமும் 200 ரூபாய்க்கு ஒரு கரும்புக்கட்டு வாங்கிட்டு வருவேன். ஒரு டம்ளர் கரும்புச்சாறு 20 ரூபாய்னு விக்குறேன். இதுல ஒருக்கட்டுக்கு 300 ரூபாய் வரைக்கும் லாபம் கிடைக்கும். இளைநீரை 25 - 28 ரூபாய்க்கு வாங்கிட்டு வந்து 30 - 35 ரூபாய் வரைக்கும் விக்குறேன். கரும்புச்சாறு, இளநீர் எப்பவுமே நல்லா போகும்ணு சொல்ல முடியாது. சீசனை பொறுத்துதான் வியாபாரம். வெயில் காலங்கள்ல வியாபாரம் அமோகமா இருக்கும். அப்புறம் எல்லாம் ஓரளவு தான் இருக்கும்.
இருந்தாலும் ஒருநாளைக்கு ஏறத்தாழ 500 - 700 வரைக்கும் லாபம் கிடைக்கும். மாசத்துக்கு பாத்தீங்கனா குறைந்தபட்சம் 15,000 ரூபாய்.
தள்ளுவண்டி கடைனாலுமே இதுக்கும் பராமரிப்பு செலவு எல்லாம் இருக்கு. கடைக்கு, கரும்பு பிழியுற மெஷினுக்குனு வருஷத்துக்கு நிச்சயம் 5,000 - 6,000 ரூபாய் வரைக்கும் செலவு ஆகும்" என்று கூறிக்கொண்டிருக்கும்போதே ஒரு வாடிக்கையாளர் வர, அவருக்கு லாவகமாக இளநீர் வெட்டிக் கொடுத்தார்.

"நான் முன்னாடியே சொன்ன மாதிரி பகுதி நேர விவசாயம் பாத்துட்டு இருக்கேன். எப்பவுமே நெல்லும், பருத்தியும் போடுவோம். ஆனா, இந்த வருஷம் நெல் மட்டும் தான் போட்டுருக்கோம். வயல்ல வேலைக்கு ஆள் எல்லாம் வெக்கல. நாங்க குடும்பமா சேர்ந்து விவசாயம் பாக்குறோம். விவசாயத்துல அவ்வளவு லாபம் எல்லாம் இல்ல. நாங்க போடுற காசுல மூணுல ஒரு பங்கு மட்டும் லாபம் கிடைக்கும். அதனால, என்னோட மனைவி எங்க வயல் வேலை மட்டுமல்லாம, 100 நாள் வேலை திட்டத்துக்கும் போயிட்டு வர்றாங்க" என்று தொடரும் பலவேசமுத்துவின் முகத்தில் பிள்ளைகள் பற்றி பேசும்போது சந்தோஷம் எட்டிப்பார்க்கிறது.
"விவசாயம், கடை - ரெண்டுல வர்ற வருமானம் வெச்சு குடும்பத்தை ஓட்டி என்னோட பிள்ளைகளுக்கும் நல்ல படிப்பை கொடுத்துட்டு இருக்கேன். என்னோட பையன் இப்போ காலேஜ் படிச்சுட்டு இருக்காரு. பொண்ணுங்க ரெண்டு பேரும் பன்னிரெண்டாவதும், பத்தாவதும் படிச்சுட்டு இருக்காங்க. என்ன தான் கஷ்டப்பட்டாலும் பிள்ளைங்களை நல்லா படிக்க வெச்சறணும். படிப்பு அவங்களை கரை சேர்த்துடும். அது தான் என்னோட ஆசையே" என்று நம்பிக்கை ஒளியுடன் நமக்கு விடைக்கொடுத்தார் பலவேசமுத்து.