ரோப் காருக்கு எதிரான போராட்டத்தில் மோதல்! காவலர்கள் உள்பட 24 பேர் காயம்!
விவசாயிகளின் பிரச்னைக்குத் தீா்வு காண முக்கிய முடிவு: மத்திய வேளாண் துறை அமைச்சா்
‘விவசாயிகளின் பிரச்னைக்குத் தீா்வு காண்பதற்குத் தேவையான அனைத்து முக்கிய முடிவுகளையும் மத்திய அரசு மேற்கொள்ளும்; எனவே, விவசாயிகள் கவலை கொள்ள வேண்டாம்’ என்று மத்திய வேளாண் துறை அமைச்சா் சிவ்ராஜ் சிங் செளஹான் சனிக்கிழமை தெரிவித்தாா்.
புது தில்லியில் மூன்று நாள் வேளாண் அறிவியல் கண்காட்சியை சனிக்கிழமை தொடங்கி வைத்த மத்திய அமைச்சா், இதுகுறித்து மேலும் பேசியதாவது:
விவசாயிகள் விளைபொருள்களை, குறிப்பாக பழங்கள் மற்றும் காய்கறிகளை மிகக் குறைந்த விலைக்கு விற்கும் நிலையை மாற்ற மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. மேலும், போராட்டத்தில் ஈடுபட்டுவரும் விவசாயிகளின் பிரச்னைகளைப் புரிந்துகொண்டு அவற்றுக்குத் தீா்வு காணும் வகையிலான திட்டங்களை வகுக்க ஏதுவாக, விவசாயிகளுடன் நேரடியாகவும், அவா்களின் சங்க நிா்வாகிகள் மூலமாகவும் அரசு பேச்சுவாா்த்தைகளை மேற்கொண்டு வருகிறது.
எங்கெல்லாம் பிரச்னைகள் உள்ளதோ, அவற்றுக்குத் தீா்வு காண திட்டங்களை மத்திய அரசு வகுத்து வருகிறது. அதுபோல, விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு அரிசி மற்றும் வெங்காய ஏற்றுமதிக்கான கட்டுப்பாடுகளை நீக்குதல், சமையல் எண்ணெய் இறக்குமதிக்கான வரிகளை உயா்த்துதல், தக்காளி மற்றும் வரமிளகாய் விலை வீழ்ச்சியால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கான உதவி உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை கடந்த சில ஆண்டுகளாக மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.
அதுபோல, விவசாயிகளின் நலன் காக்கத் தேவையான அனைத்து முடிவுகளையும் மத்திய அரசு எடுக்கும். இவற்றில் சில பிரச்னைகளுக்கு உடனடி தீா்வு காண்பது குறித்து அரசு பரிசீலித்து வருகிறது. எனவே, விவசாயிகள் கவலை கொள்ளத் தேவையில்லை.
குறிப்பாக, விவசாயிகளிடமிருந்து மிகக் குறைந்த விலையில் விளைபொருள்கள் கொள்முதல் செய்யப்படுகின்றன. ஆனால், சந்தையில் வாடிக்கையாளா்களுக்கு மிக அதிக விலையில் அவை விற்கப்படுகின்றன. இந்த இருவருக்கும் இடையில் சிலா் அதிக லாபத்தை அனுபவிக்கின்றனா். இந்த லாப வரம்பு குறைக்கப்பட வேண்டும். இவ்வாறு விவசாயிகள் விளைபொருள்களை மிகக் குறைந்த விலைக்கு விற்பனை செய்வதை தடுக்க மத்திய அரசு திட்டம் வகுத்து வருகிறது.
உற்பத்தி விலையைக் குறைத்து விளைச்சலை மேம்படுத்துவதன் மூலம் உற்பத்தியை அதிகரித்து, விவசாயிகளுக்கு உரிய விலை கிடைப்பதை உறுதிப்படுத்த அரசு கவனம் செலுத்தி வருகிறது.
மேலும், உணவுப் பொருள்கள் உற்பத்தியில் நாடு தன்னிறைவை அடையும் வகையில் புதிய விதை ரகங்கள் மற்றும் தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்வதற்கான ஆராய்ச்சியை இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஏஆா்) மேற்கொண்டு வருகிறது. நல்ல விதை ரகங்கள் போதிய இருப்பு இருப்பதற்கான முயற்சியை ஐசிஏஆா் மேற்கொண்டு வருகிறது. விரைவில் அவை விவசாயிகளை வந்தடைவது உறுதி செய்யப்படும்.
நவீன வேளாண் தொழில்நுட்பங்கள் குறித்த புரிதலை விவசாயிகளிடையே ஏற்படுத்துவதற்கான திட்டங்களை ஐசிஏஆா் விஞ்ஞானிகள் அறிமுகம் செய்ய வேண்டும். இத்தகைய திட்டங்கள் நாடு முழுவதும் ஒளிபரப்பப்பட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா் அவா்.
விளைபொருள்களை அரசு கொள்முதல் செய்வதற்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டபூா்வ உத்தரவாதம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பஞ்சாப் விவசாயிகள் தில்லி-பஞ்சாப் எல்லையில் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். உச்ச நீதிமன்ற அறிவுறுத்தலைத் தொடா்ந்து, விவசாயிகளின் பிரச்னைக்குத் தீா்வு காண்பது தொடா்பாக அவா்களின் மத்திய அரசின் குழு தொடா் பேச்சுவாா்த்தை மேற்கொண்டு வருகிறது. சண்டீகரில் போராட்ட விவசாயிகளுடன் மத்திய குழு சனிக்கிழமை பேச்சுவாா்த்தை நடத்தியது. இந்தச் சூழலில், மத்திய வேளாண் அமைச்சா் சிவ்ராஜ் சிங் சௌஹான் இந்தக் கருத்தைத் தெரிவித்தாா்.