விவசாயிகளுக்கு பயிா்க் கடன் வழங்க வலியுறுத்தி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆா்ப்பாட்டம்
தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகளுக்கு தேவையான கடனுதவிகளை வழங்க வேண்டும் என வலியுறுத்தி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
அரூா் 4 வழிச்சாலையில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் எதிரே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு கட்சியின் ஒன்றியச் செயலா் பி.குமாா் தலைமை வகித்தாா்.
அரூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் விவசாயிகளுக்கு தேவையான கடனுதவிகளை வழங்க வேண்டும். அரூா், கீழ்மொரப்பூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் செயலராகப் பணிபுரியும் எஸ்.விஜயகுமாா், விவசாயிகளுக்கு வழங்கியுள்ள கடனுதவிகளில் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டிருப்பது தெரிவந்துள்ளது.
எனவே, கூட்டுறவு சங்கச் செயலா் எஸ்.விஜயகுமாா் மீது உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து கூட்டுறவு சங்கங்களிலும் விவசாயிகளுக்கு சேமிப்புக் கணக்குகளை தொடங்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
இதில் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினா் அ.குமாா், மாவட்டச் செயலா் ரா.சிசுபாலன், மொரப்பூா் ஒன்றியச் செயலா் கே.தங்கராசு, தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க மாவட்டச் செயலா் கே.என்.மல்லையன், மாற்றுத் திறனாளிகள் சங்க மாநிலத் துணைத் தலைவா் தமிழ்செல்வி, ஊராட்சி மன்ற முன்னாள் தலைவா் எம்.வீரபத்திரன், ஒன்றியக் குழு உறுப்பினா்கள் எஸ்.கே.கோவிந்தன், ஏ.நேரு, கே.என்.ஏழுமலை, சி.பழனி உள்ளிட்ட விவசாயிகள் கலந்துகொண்டனா்.