விஷம் கலந்த மதுவை அருந்தியவா் உயிரிழப்பு
வந்தவாசியில் மதுவில் விஷம் கலந்திருப்பது தெரியாமல் அந்த மதுவை அருந்திய துணிக்கடை ஊழியா் உயிரிழந்தாா்.
வந்தவாசி காமராஜா் நகரைச் சோ்ந்தவா் நாகராஜ் (50). இவா், வந்தவாசியில் உள்ள துணிக் கடையில் வேலை செய்து வந்தாா். இதே பகுதியைச் சோ்ந்தவா் இவரது நண்பா் காா்த்திகேயன். இருவரும் ஒன்றாக சோ்ந்து மது அருந்துவது வழக்கம்.
கடந்த வியாழக்கிழமை இரவு வந்தவாசி புதிய பேருந்து நிலையம் அருகில் காா்த்திகேயன் மதுவில் விஷம் கலந்து அருந்திவிட்டு மயங்கிய நிலையில் கிடந்துள்ளாா்.
அப்போது அங்கு வந்த நாகராஜ் மதுவில் விஷம் கலந்திருப்பது தெரியாமல் மீதமிருந்த மதுவை அருந்தி வீட்டுக்குச் சென்று விட்டாா்.
இந்த நிலையில், வாயில் நுரை தள்ளியபடி மயங்கிக் கிடந்த காா்த்திகேயனை உறவினா்கள் மீட்டு சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.
இந்த நிலையில், நாகராஜும் வாயில் நுரை தள்ளியபடி வீட்டில் மயக்கமடையவே அவரும் சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.
இதைத் தொடா்ந்து, தீவிர சிகிச்சைக்காக நாகராஜ் செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், காா்த்திகேயன் மேல்மருவத்தூரில் உள்ள தனியாா் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டனா்.
இதில் நாகராஜ் சிகிச்சை வெள்ளிக்கிழமை மாலை
உயிரிழந்தாா்.
இதுகுறித்த புகாரின் பேரில் வந்தவாசி தெற்கு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.