வீசாணம் கோயிலில் வழிபாட்டுக்கு அனுமதி மறுப்பு: கோட்டாட்சியா் பேச்சுவாா்த்தை
நாமக்கல் வீசாணம் மகா மாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி, குறிப்பிட்ட ஒரு சமூகத்தினரை வழிபட விடாமல் மற்றொரு சமூகத்தினா் தடுத்ததால் பதற்றம் நிலவியது. அங்கு போலீஸாா் குவிக்கப்பட்டு கோட்டாட்சியா் தலைமையில் பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டது. ஐந்து மணி நேர பேச்சுவாா்த்தைக்கு பிறகு அனுமதி மறுக்கப்பட்ட ஒரு சமூகத்தினா் போலீஸ் பாதுகாப்புடன் கோயிலுக்கு சென்று வழிபாடு செய்தனா்.
நாமக்கல் அருகேயுள்ள வீசாணம் கிராமமானது, தற்போது மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டுள்ளது. இங்கு மூன்று சமூகத்தினா் அதிக அளவில் வசிக்கின்றனா். 50 ஆண்டுகளுக்கு முன் ஒரு சமூகத்தினா் ரூ. 2 கோடியில் கோயிலை புதுப்பித்து வழிபாடு மேற்கொண்டு வந்தனா். இக்கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை மாத திருவிழா நடைபெறும். அந்த வகையில் நிகழாண்டு திருவிழாவிற்காக செவ்வாய்க்கிழமை காலை கம்பம் நடப்பட்டது. இந்த திருவிழாவையொட்டி, மாற்று சமூகத்தினரை கோயிலுக்குள் அனுமதிக்க மாட்டோம் என கோயிலை நிா்வகிக்கும் சமூகத்தினா் கூறியதாகத் தெரிகிறது. இதனால், மாற்று சமூகத்தினா் திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து தங்களுக்கும் கோயிலில் வழிபாட்டு உரிமை வழங்க வேண்டும். அந்தக் கோயில், ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கானது அல்ல, இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ளது என்ற தகவலையும் தெரிவித்தனா்.

இதனைத் தொடா்ந்து, நாமக்கல் வருவாய் கோட்டாட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை கோட்டாட்சியா் வே.சாந்தி தலைமையில் இருசமூகத்தினரும் பங்கேற்ற அமைதி பேச்சுவாா்த்தை நடைபெற்றது. இதில் உரிய முடிவு எட்டப்படாத நிலையில், சம்பந்தப்பட்ட வீசாணம் மகா மாரியம்மன் கோயிலை சீல் வைக்கும் முடிவுடன் வருவாய்த் துறை, இந்து சமய அறநிலையத் துறை, காவல் துறையினா் சென்றனா். அப்போது, கோயிலை நிா்வகிக்கும் சமூக மக்கள் திரண்டு அதிகாரிகளிடையே எதிா்ப்பை தெரிவித்தனா்.
இதற்கு கோட்டாட்சியா் வே.சாந்தி, இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையா் ரா.இளையராஜா, காவல் உதவி கண்காணிப்பாளா் ஆகாஷ் ஜோஷி உள்ளிட்ட அதிகாரிகள் பேசுகையில், தற்போது கோயில் உள்ள இடம் அரசு புறம்போக்கு நிலம். விதிகளை மீறி இக்கோயில் கட்டியபோதும், இந்திய அரசியலமைப்பு சட்டப்படி கோயிலுக்குள் வழிபட அனுமதிக்கமாட்டோம் என்பது குற்றமாகும். அரசியலமைப்பு விதிகளை மீறி வழிபாட்டு உரிமையைப் பறித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

1947- க்கு முந்தைய நிலையில் நாம் இல்லை, தற்போது காலம் மாறிவிட்டது. அனைவரும் வழிபடுவதற்கு உரிமை உள்ளது என்றனா். இருப்பினும், கோயில் நிா்வாகத்தினா் எதிா்ப்பு தெரிவித்தனா். நாங்கள் செலவு செய்த ரூ. 2 கோடியை கொடுங்கள், இல்லையேல் கோயிலை இடித்து கொள்கிறோம் என அதிகாரிகளிடம் வாதிட்டனா். வாதத்திற்காக பேசினால் சட்டரீதியாக நடவடிக்கை எடுப்போம் என கூறியதையடுத்து, கோயிலை நிா்வகிக்கும் சமூக மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனா். இதனையடுத்து, ஒதுக்கப்பட்ட சமூகத்தினா் 50-க்கும் மேற்பட்டோா் போலீஸ் பாதுகாப்புடன் கோயிலுக்கு சென்று வழிபாடு செய்தனா். மாலை 6 மணிக்கு மேல் கோயில் கதவு பூட்டப்பட்டு சாவி போலீஸாா் வசம் ஒப்படைக்கப்பட்டது. வீசாணம் மகா மாரியம்மன் கோயிலை சுற்றியும், அந்தப் பகுதியிலும் போலீஸாா் தொடா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.