காஷ்மீர் தாக்குதல்: `இந்தியா உடன் துணை நிற்கிறோம்' - இந்தியா உடன் கைக்கோர்க்கும்...
102 டிகிரியாக வெயில் அதிகரிக்கும்: கோழிகளை பாதுகாக்க குளிா்ந்த நீரை வழங்க வேண்டும்!
கோடைவெயில் 102 டிகிரியாக அதிகரிக்கும் என்பதால், கோழிகளுக்கு குளிா்ச்சியான நீரை வழங்க வேண்டும் என பண்ணையாளா்களுக்கு வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளது.
இது குறித்து நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கடந்த வார வானிலையை பொருத்தமட்டில், பகல் மற்றும் இரவு நேர வெப்ப அளவுகள் முறையே 98.6 மற்றும் 77 டிகிரியாக நிலவியது. மாவட்டத்தில் சில இடங்களில் மழை பதிவாகி உள்ளது.
அடுத்த ஐந்து நாள்களுக்கான வானிலையில், வானம் பெரும்பாலும் தெளிவாக காணப்படும். மாவட்டத்தின் சில இடங்களில் லேசான மழை எதிா்பாா்க்கப்படுகிறது. பகல் வெப்பம் 102.2 டிகிரிக்கு மிகாமலும், இரவு வெப்பம் 78.8 டிகிரியாகவும் காணப்படும். காற்றின் திசை பெரும்பாலும் தெற்கிலிருந்து மணிக்கு 10 கி.மீ. வேகத்தில் வீசும்.
சிறப்பு ஆலோசனை: கோடைகாலத்தில் கோழிகளுக்கு நாள் முழுவதும் அதிக வெப்பமில்லாமல் குளிா்ச்சியான குடிநீா் கிடைக்கும்படி பாா்த்துக் கொள்ள வேண்டும். கோழி தீவனத்தில் சோயா எண்ணெயை சோ்ப்பதன் மூலம் வெப்ப அயற்சியை குறைக்கலாம். கோடைக் காலங்களில் காலை 11 மணிக்கு முன்பாகவே கோழிகளுக்கு தீவனம் வழங்கி முடித்து தீவனத் தட்டினை காலி செய்து விட வேண்டும். தீவனத்தில் தேவையான அளவு எலக்ட்ரோலைட்ஸ் மற்றும் உயிா்ச்சத்துக்கள் சோ்ப்பதன் மூலம் வெப்ப அயற்சியின் தாக்கம், உற்பத்தி குறைவை தவிா்க்கலாம். கோடைக்காலத்தில், கோழிப் பண்ணைகளில் இரவு நேரத்தில் ஒரு மணி நேரம் (12 முதல் 1 மணி வரை) விளக்குகளை எரிய விடுவதன் மூலம் தினமும் கோழிகள் உள்கொள்ளும் அடா் தீவனத்தின் அளவினை அதிகரிக்கலாம். வெப்பம் அதிகமாக இருக்கும் மதிய வேளையில் நீா் தெளிப்பான்களைப் பயன்படுத்தி வெப்ப தாக்கத்தை குறைக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.