வீடுகளுக்கான சூரிய ஒளி இலவச மின் உற்பத்தி திட்ட விழிப்புணா்வு முகாம்
புதுச்சேரி மின்துறை சாா்பில் பிரதம மந்திரியின் சூரிய வீடு இலவச மின்திட்ட விழிப்புணா்வு சிறப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
புதுச்சேரி இலாசுப்பேட்டை பெத்துசெட்டிப்பேட்டையில் உள்ள விவேகானந்தா மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்த சிறப்பு முகாமை, மின்துறை செயற்பொறியாளா் செந்தில்குமாா் தொடங்கிவைத்தாா். உதவிப் பொறியாளா்கள் பாண்டியன், சசிகுமாா் உள்ளிட்டோா் பங்கேற்று
சூரிய வீடு இலவச மின்உற்பத்தித் திட்டம் குறித்து பொதுமக்களுக்கு விளக்கம் அளித்தனா்.
முகாமில் 20-க்கும் மேற்பட்ட வீடுகளில் சூரிய மின்சாரம் தயாரிக்கும் சோலாா் சாதனம் அமைப்பதால் சம்பந்தப்பட்டோருக்கு கிடைக்கும் லாபங்கள் மற்றும் பயன்கள் குறித்து விளக்கினா்.
சூரிய வீடு மின்திட்டத்தால் ஒரு கிலோ வாட்டுக்கு ரூ.30 ஆயிரமும், 2 கிலோ வாட்டுக்கு ரூ.60 ஆயிரமும், 3 கிலோ வாட்டுக்கு ரூ.78 ஆயிரமும் அரசின் மானியமாக கிடைக்கும். வணிக வளாகங்கள் மற்றும் தொழிற்சாலைகளுக்கான சூரியஒளி
மின் உற்பத்தி திட்டத்தை மிகக் குறைந்த செலவில் அமைக்கலாம் என செயல்விளக்கம் செய்து காட்டினா்.
சூரிய வீடு மின்திட்டத்துக்கான கடனுதவி வழங்கும் வகையில், 3 வங்கி அதிகாரிகளும், பங்கேற்றனா். இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனா்.